கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர் தனியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசித்தனர்.
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடம் பேசுகையில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் வருவதை அடுத்து நகரம் மற்றும் ஒன்றியம் பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை நிர்வாகிகள் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும்; கட்சியில் இருக்கும் நபர்களுக்கு தகுந்த நேரத்தில் பொறுப்புகள் வழங்கி கட்சியில் முக்கியப் பணியாற்றிட வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ’தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி திராவிட மாடல் எனக் கூறி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வரும் ஆட்சியாகும். ஆட்சிக்கு வரும் பொழுது அளித்த வாக்குறுதிகளை மறந்து தற்பொழுது தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் விதமாக ஆட்சி நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்தார்.