அடுத்த ஆண்டில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் கோயம்புத்தூர்: கிட்டாம்பாளையம் அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழில் பேட்டையில் மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவு தொழில் பேட்டை பணிகள் கிடப்பில் போடப்பட்டதாகவும், திமுக அரசு பொறுப்பேற்ற பின் புதுத்தொழில்கள் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் சூலூர் வட்டத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு 316 ஏக்கர் நிலம் தொழில் பேட்டைக்காக கையகப்படுத்தபட்டதாகவும், அடுத்த வந்த அதிமுக அரசு, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் எந்த பணிகளும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
316 ஏக்கர் நிலம் பயன்படுத்தாமல் இருப்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தொழில் பேட்டையில் சாலை, தண்ணீர், மேல்நிலை நீர்த்தொட்டி, நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளுக்காக 24 கோடியே 61 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அடுத்த ஒராண்டுக்குள் 585 தொழில் மனைகளில், தொழில் நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டு, ஆசியாவிலேயே மிகப்பெரிய கூட்டுறவு தொழில் பூங்காவாக இது இருக்கும் என்றார். மேலும் இந்த கூட்டுறவு தொழில் பேட்டை மூலம் நேரடியாக 15 ஆயிரம் பேரும், மறைமுகமாக 35 ஆயிரம் பேர் என மொத்தம் 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அன்னூர் தொழிற் பூங்காவை பொறுத்தவரை விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது, விவசாயிகள் சந்தோசமாக நிலம் வழங்கினால் மட்டும் வாங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
இதையும் படிங்க:ஓபிஎஸ் தலைமையிலான மா.செ. கூட்டம் தொடங்கியது