பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் உலக அளவில் இந்தியாவின் நிலை 109. அதேபோல் இந்திய அளவில் தமிழ்நாட்டின் நிலை 9. பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுகாதாரத்தில் இந்தியாவும் தமிழ்நாடும் வெகு தொலைவிலிருந்து வேகமாக பயணிக்க வேண்டும். அந்தப் பயணத்திற்கு ஜனநாயகத்தின் அடிப்படையான ஊராட்சிகளில் பொதுமக்களும், ஊராட்சி அலுவலர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். அந்தப் பணியைத் தான், கோவையில் உள்ள முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சித் தலைவர் சக்திவேல் தொடங்கியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், பதவியேற்று தங்களுடைய ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு, ஊராட்சியின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம், சூலூர் அடுத்த முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த கந்தவேல் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தங்களுடைய ஊராட்சிப் பகுதிகளை எவ்வாறு சுத்தமாக வைப்பது என மன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்தார். அதில் முதல் கட்டமாக பொது இடங்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்கும் வகையில், பணிகள் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
பின்னர் ஊராட்சிப் பகுதிகளில் குப்பை கொட்டும் இடங்களைத் தேர்வு செய்து, அந்தப் பகுதிகளில் ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன. அதில் ''கோயிலை சுத்தமாக வைத்து புண்ணியம் அடைவதைப் போல, ஊரை சுத்தமாக வைத்து புண்ணியம் அடைவது நமது கடமை'' என்றும், ஊராட்சியை சுத்தமாக வைக்கும் கடமையை மீறுபவர்களிடம் ரூ. 1000 அபராதம் வசூலிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.