கோயம்புத்தூர்: இந்து மத மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா, ஒன்பது நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி அம்மன்களுக்காக இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் முக்கிய அம்சமாக பல்வேறு மக்கள் அவர்களது இல்லங்கள் மற்றும் கோயில்களில் கொலு பொம்மைகளை வைத்து வழிபடுவர்.
நாள்தோறும் மாலை நேரங்களில் சிறப்பு வழிபாடுகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று, ஒன்பது நாட்களும் கோலாகலமாக இருக்கும். முன் காலத்தில் இந்த கொலுவில் சாமி சிலைகள் வைத்தும், புராணக் கதைகள், படி சிலைகளை அடுக்கி வைத்தும் வழிபட்டு வந்தனர்.
பின்னர் நமது பாரம்பரிய பண்டிகைகள், இல்ல விழாக்களை குறிக்கும் பொம்மைகள் இடம் பெற்றன. நாளடைவில், பல்வேறு பொம்மைகள் இந்த கொலுவில் இடம் பெற்று தற்போது கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டின் நவராத்திரி விழா அக்டோபர் 15ஆம் தேதி துவங்கி 24ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை பல்வேறு இடங்களில் துவங்கி உள்ளது.
10 நாள் கண்காட்சி:இந்நிலையில், கோயம்புத்தூர் டவுன்ஹால் பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று (செப் 29) முதல் துவங்கியது. அக்டோபர் 25ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ளது. இங்கு பல்வேறு சாமி சிலைகள், பண்டிகைகளையும் இல்ல விழாக்களையும் குறிக்கும் விதமான பொம்மைகள் என பல்வேறு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, சிவன், பெருமாள் சிலைகளும் இக்கடவுள்களின் அவதாரங்கள், விநாயகர், முருகன் போன்ற சிலைகள் ஏராளமானவை இடம் பெற்றுள்ளன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கொலுவில் விக்ரம் லேண்டர்:தற்பொழுது புது வரவாக இந்திய விஞ்ஞானிகளால் அனுப்பப்பட்ட சந்திராயன் 3, விக்ரம் லேண்டர் பிரக்யான் ரோவர் மாதிரிகள் கொலுவில் இடம் பெற்றுள்ளது. இந்த சந்திராயன் விலை செட்டின் விலை ரூ.2,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற கொலு பொம்மைகளின் விலை 110 ரூபாயில் இருந்து துவங்குகிறது. மேலும், இந்நாட்களில் பொருட்களுக்கு ஏற்ப தள்ளுபடியும் வழங்கப்படுகிறது என விற்பனையாளர்கள் கூறினர்.