கோயம்புத்தூர்: குனியமுத்தூர் பகுதியிலுள்ள ஆயிஜா மஹால் திடலில், ஜாக் கமிட்டியைச்சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு சிறப்புத்தொழுகையில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு கரோனா காரணமாக சிறப்புத்தொழுகை நடத்தப்படாத நிலையில், இந்தாண்டு சிறப்புத்தொழுகையில் ஜாக் கமிட்டியைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாமியத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தை இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.
ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய ஜாக் கமிட்டி இஸ்லாமியர்கள் நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால், இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். கோவையில் புத்தாடைகள் அணிந்து சிறப்புத்தொழுகையில் பங்கேற்ற ஜாக் கமிட்டி இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
நாளை பெரும்பான்மை பிரிவான சுன்னத் ஜமாத் சார்பில் ரம்ஜான் சிறப்புத்தொழுகை மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் வரும் மே 3ஆம் தேதி ரம்ஜான் - தலைமை காஜி அறிவிப்பு