தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொருளாதார மந்தம்: தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுப்பதில் சிக்கல்

கோவை: கடுமையான பொருளாதார நெருக்கடியால் மோட்டார் பம்புசெட் விற்பனை பாதிப்பு 500 கோடி ரூபாய்க்கு மேல் பொருட்கள் தேக்கம் அடைந்தது, தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

maniraj

By

Published : Sep 10, 2019, 1:42 PM IST

கோயம்புத்தூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மோட்டார் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் செய்யும் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இதில், 50க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்களும் உள்ளது. இந்தச் சிறுகுறு தொழிலை நம்பி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கோவையில் இருந்து தயாராகும் மோட்டார் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், அனைத்து விதமான தொழில்களும் முடங்கியுள்ளன. முக்கியமாக மோட்டார் பம்புசெட் உற்பத்தி தொழிலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால், கடந்த மூன்று மாதங்களாக விற்பனை குறைந்துள்ளதால் பல கோடி ரூபாய் மதிப்பிலான மோட்டார் பம்புசெட் அந்தந்த நிறுவனங்களிலேயே தேக்கம் அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, கோவை பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மணிராஜ் கூறுகையில், ஜிஎஸ்டி அதிகப்படுத்தியதன் காரணமாக சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியே ஜாப் ஆடர் எடுத்து செய்யும் தங்களுக்கும் விதிக்கப்படுகிறது. இதனால், குடிசைத் தொழிலாக செய்யப்படும் பம்புசெட் உற்பத்தி தொழில் பாதிப்படைய முக்கிய காரணமாக உள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பொருளாதார நெருக்கடியால், ஒவ்வொரு நிறுவனத்திலும், 10 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பம்புசெட்டுகள் மற்றும் உதிரி பாகங்கள் தேக்கம் அடைந்துள்ளன. ஏறக்குறைய 500 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சந்தைப்படுத்த படாமல் அப்படியே உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் தொழில் மிகவும் மந்தமாக உள்ளது. தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், இதற்கு போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து தங்களுக்கு விதிக்கப்படுகின்ற வரியை குறைத்தால் மட்டுமே இத்தொழிலை காப்பாற்ற முடியும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details