நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப்பணம், தங்கநகை உள்ளிட்டவற்றை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை வடக்கு தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராஜேஸ்வரி தலைமையில் காவல் துணை ஆய்வாளர் ஜோசப், தலைமை காவலர் ரங்கசாமி, ராஜேந்திர பிரசாத் ஆகியோர் வடவள்ளி- தொண்டாமுத்தூர் சாலையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் இரண்டு ஏர்கன்கள் இருந்தன. அந்த பணம் கணபதி பகுதியில் இருந்து இருட்டுபள்ளம் பகுதியில் உள்ள தனியார் வங்கி கிளைக்கு கொண்டு செல்லப்படுவதாக வாகனத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
தனியார் வங்கி பணம் ரூ.5 லட்சம், துப்பாக்கி பறிமுதல் பின்னர், அந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை வங்கி அதிகாரிகள் சமர்ப்பித்தனர். தற்போது இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.