சென்னை: பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோயம்புத்தூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் டெல்லி செல்லும் முன் சென்னை விமானநிலையத்தில் இன்று (ஜூன்.3) செய்தியாளர்ளைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது; “தமிழ்நாட்டில் இரண்டு நாள்கள் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்படும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். மத்திய அரசு 4.20 லட்சம் தடுப்பூசிகளை தந்தது. இதில் சென்னைக்கு அடுத்தப்படியாக, கோயம்புத்தூருக்கு அதிகமான தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டு, அதிகமான இடங்களில் ஊசி போடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக மத்திய அரசுக்கும், மாநிலத்தின் முதலமைச்சருக்கும், கோயம்புத்தூருக்கு அதிகமாக தடுப்பூசிகளை அனுப்பிய மாநில சுகாதார துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு மாநிலங்கள் 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்து உள்ளன. தமிழ்நாட்டிலும் மாணவர்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்த கருத்தை தான் பாஜக மாநில தலைவர் முருகனும் கூறியுள்ளார். ஒவ்வொரு நாளும் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்று மாணவர்களும், பெற்றோர்களும் தவித்து கொண்டுள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்.
பல்வேறு புதிய திட்டங்களுக்கும், நலத்திட்ட உதவிகளையும் முதன்முறையாக முதலமைச்சர் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வழங்கி உள்ளார். முன்கள பணியாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும் பணியும் நடந்துள்ளது.