கோயம்புத்தூர்:பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் சொத்துப் பட்டியல் வெளியிட்டது குறித்தும், வாட்ச் பில் வெளியிட்டு இருப்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "சொத்துப் பட்டியல் குறித்து திமுக தலைமையில் இருந்து உரிய விளக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணாமலை காட்டியதை மனசாட்சி இருக்கும் யாருமே பில்லாக ஏற்று கொள்ள மாட்டார்கள் பில் என காகிதத்தை வெளியிட்டார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்க வேண்டும். இந்த எக்ஸ் எல் சீட் தயாரிக்கவா 4 மாதம் ஆனது?" என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு எதுவுமே கிடையாது எல்லாமே எனது நண்பர்கள் கொடுக்கின்றனர் என அண்ணாமலை தெரிவிக்கிறார், அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் 3.75 லட்சம் ரூபாய். மாத மாதம் இதை யார் கொடுக்கின்றார் எனவும் கேள்வி எழுப்பினார். ஒருமாதம் உதவி செய்யலாம், வருடம் முழுக்க யார் உதவி செய்வார்கள்? ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு பணம் அனைத்தும் வெளியில் இருந்து வருகிறது என்றால், பணம் எங்கே வார் ரூம்மில் இருந்து வருகின்றதா ? வார் ரூமில் செய்யப்படும் வசூல் தான் அவரது நண்பரா? , யார் செலவு செய்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்" என்றார்.
மேலும், "திமுகவினர் வேட்பு மனுவில் தெரிவித்த சொத்து பட்டியலை தூக்கிக்கொண்டு வருவதாகவும், அண்ணாமலை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் சொந்த நிதியில் இருந்து பணம் எதுவும் செலவு செய்யவில்லை என்று தெரிவித்து இருக்கும் போது, அவரக்குறிச்சி தேர்தலில் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தது எப்படி என்று தெரிவிக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி சாடினார்.
அதோடு, "அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு நடத்தியத்தற்கு பதிலாக வீடியோ ரெக்கார்டு பண்ணி அனுப்பி இருக்கலாம், பத்திரிகையாளர்களுக்கு கேள்வி கேட்கவே வாய்ப்பு கொடுக்கவில்லை அவர் குறிப்பிடும் நபர் வாட்ச் வாங்கினது 4.5 லட்சம் ரூபாய்க்கு, அதை 3 லட்சம் ரூபாய்க்கு இவருக்கு கொடுத்ததாக சொல்கிறார், கிடைக்காத அரிய பொருளின் மதிப்பு கூடுமே தவிர குறையாது, வாட்ச் நம்பரையும் மாற்றி மாற்றி சொல்கின்றார். அதில் இருக்கும் தகவல்களை மாற்றி சொல்கிறார் ஒரு வெகுமதியை மறைக்க, லஞ்சத்தை மறைக்க ஆயிரம் பொய்யை சொல்கின்றார் பரிசு கொடுத்தார்கள் என சொல்வதில் அண்ணாமலைக்கு என்ன தயக்கம்?" என கேள்வி எழுப்பினார்.