தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கணவன் மனைவி காலில் விழலாம்' - 81 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைத்து அமைச்சர் உதயநிதி அட்வைஸ்! - 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த உதயநிதி

கோயம்புத்தூரில், மு.க. ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 81 ஜோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் செய்து வைத்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 5, 2023, 4:25 PM IST

Updated : Mar 5, 2023, 4:52 PM IST

முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு 70 ஜோடிகளுக்கு திருமணம்

கோயம்புத்தூர்:தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பில் 81 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தாலியை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த திருமணம்

மேலும், புதுமணத் தம்பதிகள் மற்றும் உறவினர்களுடன் தனித்தனியாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு ஸ்மார்ட் வாட்ச்சை பரிசளித்தார். இதில் திருமணமான ஜோடிகளுக்கும் கல்யாண சீர் வரிசைகள் மற்றும் இல்லத்திற்கு தேவையான டிவி, மிக்ஸி, குளிர்சாதனப் பெட்டி, நாற்காலிகள், மின்சார அடுப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

சீர் வரிசை
சீர் வரிசைப் பொருள்கள்

இந்நிகழ்வில் விழா பேருரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'நான் விழா பேருரை ஆற்றவில்லை சிற்றுரையும் வாழ்த்துரையும் மட்டுமே ஆற்றுகிறேன்' எனக் கூறி அவரது உரையைத் தொடங்கினார். மேற்கொண்டு பேசிய அவர், ''இவ்விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்கு அனைத்து பெருமைகளும் அமைச்சர் செந்தில் பாலாஜியையே சாரும். அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்திற்கு அமைச்சராக இருக்கிறார். கோவை மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சராக இருக்கிறார்.

அவர் கடந்த சட்டப்பேரவை தேர்தலில், கோவை மாவட்டத்தில் நாம் தோல்வியுற்றோம். அதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமித்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆற்றிய கழகப் பணிகளால் கோவையில் உள்ளாட்சித் தேர்தலில் 90 விழுக்காடு வெற்றி பெற்றுத் தந்திருக்கிறார் என்றால் அதன் முழு பெருமையும் உழைப்பும் செந்தில் பாலாஜியையே சாரும்.

உதயநிதி ஸ்டாலின் உரை

முதலமைச்சரின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 70 திருமணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது 81 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஜோடிக்கும், அவரவர் குடும்ப முறைப்படி தாலி வாங்கிக் கொள்ள தொகை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கல்யாண சீர்வரிசைகள் உட்பட டிவி, குளிர்சாதனப் பெட்டி எனப் பல்வேறு அன்பளிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக அமைச்சர் செந்தில் பாலாஜி பார்த்து பார்த்து செய்துள்ளார். கணவர் மனைவிக்கு தாலி கட்டி விட்டதால், யாரும் யாருக்கும் அடிமை கிடையாது. இங்கு நடைபெற்றுள்ளது சுயமரியாதை திருமணம்.

பல்வேறு இடங்களில் இந்த சுயமரியாதை திருமணங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த சுயமரியாதை திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என போராடியவர், தந்தை பெரியார். அதனை வழிநடத்தியவர் பேரறிஞர் அண்ணா. அதன்வழி தற்பொழுது நம்முடைய தலைவர் பல்வேறு இடங்களில் சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்து வருகிறார்.

திருமணமானவர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் அடிமையாக இருக்கக்கூடாது; உங்களுடைய உரிமைகளை நீங்கள் கேட்டுப்பெற வேண்டும். எடுத்துக்காட்டாக அதிமுக - பாஜகவை போன்று இருந்துவிடாதீர்கள், ஒருவர் காலில் ஒருவர் விழுந்துவிடாதீர்கள்.

திருமணமானவர்கள் ஆசிப்பெற வேண்டுமென்றால் உங்களது பெற்றோர்கள் அல்லது மூத்தவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுங்கள். காலில் விழுந்தவர்கள் நிலைமை எல்லாம் தற்போது எப்படி இருக்கிறது என அனைவருக்கும் தெரியும். தவறு செய்திருந்தால் மனைவி, கணவன் காலில் விழலாம்; கணவன் மனைவி காலில் விழலாம்; அதில் தவறில்லை, சண்டை வரத்தான் செய்யும். சண்டை இல்லாத குடும்பம் எங்கும் இல்லை.

எந்த விதத்திலும் எந்த நேரத்திலும் உங்களுடைய உரிமைகளை விட்டுக்கொடுக்க வேண்டாம், அதனை கேட்டுப் பெறுங்கள். உங்களுக்குள் அந்த புரிதல் இருக்க வேண்டும். இல்லற வாழ்வில் அடி எடுத்து வைத்துள்ள அனைவருக்கும் கலைஞரின் சார்பிலும் முதலமைச்சர் சார்பிலும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு சுத்தமான தமிழ்ப் பெயரை வையுங்கள். இதனை உங்களிடம் வேண்டுகோளாக முன் வைக்கிறேன். இந்த ஒரே ஒரு உறுதியை மட்டும் தான் நான் உங்களிடம் கேட்கிறேன்.

தற்போது இந்தி மொழி திணிக்கப்பட்டு வரும் நிலையில், நம்முடைய தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டுமெனில் இதுபோன்ற சிறு சிறு விடயங்களை நாம் முன்னெடுக்க வேண்டும். வீட்டில் அரசியல் பேசுங்கள், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது, இந்தியாவில் என்ன நடக்கிறது, ஒன்றிய அரசு என்ன செய்கிறது, தமிழ்நாடு அரசு சார்பில் தீட்டப்பட்டுள்ள திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதிமுக ஆட்சி நம்மிடம் அரசை விட்டு விட்டுச்சென்ற பொழுது கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. கரோனா பெருந்தொற்றில் அதிகமாக பாதிக்கப்பட்டது,இந்த கோவை மாவட்டம்.

அப்போது அதற்கான உடை அணிந்து மருத்துவமனைக்குள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டவர் இந்தியாவிலேயே ஒரே முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் தான். இதனை யாரும் மறந்துவிடக்கூடாது. நம்முடைய மக்களுக்கு மறதி என்பது அதிகம், பல விஷயங்களை மறந்துவிடுகிறார்கள். தினமும் செய்தித்தாள்கள் படியுங்கள், தொலைக்காட்சி செய்திகளைப் பாருங்கள்.

அதிமுக பாஜகவினர் தேர்தல் வரும்போது மட்டும் தான் வெளியில் வந்து மக்களை சந்திப்பார்கள், பின்பு சென்று விடுவார்கள். பிரச்னை வரும்போது மட்டும் கட்சி எனக்கு சொந்தம் என கூறிக்கொண்டு வெளியில் வருவார்கள். 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்பு, தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது தான் வெளியில் வந்தார்கள். மிகப்பெரிய தோல்வியை பார்த்தார்கள். மீண்டும் சென்று விட்டார்கள்.

மீண்டும் ஒரு எட்டு மாதத்திற்கு வெளியில் வர மாட்டார்கள். நாடாளுமன்றத்தேர்தல் வரும்போது தான் மீண்டும் வெளியில் வருவார்கள். ஆனால், திமுகவினர் எப்பொழுதும் மக்கள் பணியில் ஈடுபடுபவர்கள், தேர்தல் இருந்தாலும் இல்லை என்றாலும் மக்களோடு இருந்து மக்கள் பணி ஆற்றுபவர்கள் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினர். எனவே, இந்த அரசுக்கு நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்.. அண்ணாமலை பகிரங்க சவால்..

Last Updated : Mar 5, 2023, 4:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details