தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழா: பார்வையிட்ட அமைச்சர் முத்துசாமி! - millet exhibition 2023

Millet exhibition in Coimbatore: சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.15) சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழாவை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.

சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழா
சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 8:17 PM IST

சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழா

கோயம்புத்தூர்: சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.15) சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் வேளாண்மை மருத்துவம், குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம், சமூக நலம், சித்த மருத்துவம், சத்துணவு, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாடு ஆகிய துறைகளின் சார்பில் சிறுதானியம் தொடர்பான 16 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

அதில் கம்பு, சோளம், திணை, குதிரைவாலி, கேழ்வரகு, ராகி உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறுதானிய உணவுத் திருவிழாவை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்துப் பார்வையிட்டார். மேலும் பல்வேறு உணவுகளைச் சுவைத்துப் பார்த்து அதுகுறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, "2023ஆம் ஆண்டை ஐநா சபை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளதன் அடிப்படையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல பேர் முன்னெடுத்துச் செய்கிறார்கள். இந்தாண்டு முதலமைச்சரின் முயற்சி காரணமாகச் சிறுதானிய விழிப்புணர்வுகளில் பல்வேறு தரப்பினர் பங்கெடுத்துள்ளனர்.

சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே முதல் நோக்கம். நோய் வராமல் தடுக்க சிறுதானியங்களை முறையாகப் பயன்படுத்தினால் சரியாக இருக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சிறுதானியங்கள் பயிரிடும் விவசாயிகளை ஊக்கப்படுத்தவும், உதவி செய்யவும் வேண்டும்.

உண்மையில் சிறுதானியங்களைப் பயன்படுத்தினால் எல்லோருக்கும் நல்லது. பள்ளி, கல்லூரிகளில் சிறுதானியங்கள் ஸ்டால் போடலாம் என ஆலோசனை வழங்கினார்கள். அதனை நிறைவேற்றுவதாக ஆட்சியரும் உறுதியளித்துள்ளார். கிராமங்களில் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. நகரத்தில் உள்ளவர்கள் திசை மாறி சென்றதால், நகரங்களில் விழிப்புணர்வுகளை மேற்கொள்வது சரியாக இருக்கும் என்று கூறினார்.

கள் இறக்க அனுமதி வழங்கப்படுமா என்று செய்தியாளரின் கேள்விக்கு, "அது குறித்து கள ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் அறிவிப்புகள் பின்னர் தெரிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியர், மாநகராட்சி அதிகாரிகள் நோய் பரவலைத் தடுப்பதில் கவனமாக இருக்கிறார்கள். போலி மதுபானங்கள் டாஸ்மாக் கடையில் இருக்கவே இருக்காது. வெளியில் போலி மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது காவல் துறை எச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் போலி மதுபானங்களால் டாஸ்மாக் விற்பனை சரியவில்லை. போலி மதுபான விற்பனையை ரெகுலராகவோ, தொழிலாகவோ செய்ய முடியாது. காவல் துறை நடவடிக்கை காரணமாக ஒவ்வொரு நாளும் இடத்தை மாற்றித் தான் நடத்துகிறார்கள். கோவைக்காக மாஸ்டர் பிளான் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் மாஸ்டர் பிளான் வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து உணவுத் திருவிழாவில் பங்கேற்ற கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மாரியம்மன் மகளிர் சுய உதவிக் குழு மகேஸ்வரி கூறுகையில், "நம்மில் பலரும் செடி கொடிகளில் உள்ள மருத்துவ பலன்களைத் தெரியாமல் இருக்கின்றோம். சளி இருமல் என்றாலே நாம் மருத்துவமனைக்குத் தான் செல்வதைத் தவிர்த்து, வீட்டின் அருகிலேயே கிடைக்கும் தாவரங்களைச் சமைத்துச் சாப்பிட்டாலே போதுமானது. மேலும் தற்போது பெரும்பாலானோருக்குச் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களும் இருக்கின்றன.

நாம் அனைவரும் சிறுதானியங்களை நம் அன்றாட உணவுடன் உட்கொண்டு வந்தால் பல்வேறு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்" என தெரிவித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த சிறுதானிய உணவு திருவிழா கண்காட்சியைப் பொதுமக்கள் உட்பட அங்கு பணிபுரியும் பல்வேறு அரசு அலுவலர்களும் பார்த்து பல்வேறு உணவுகளைச் சுவைத்து அதன் நன்மைகள் குறித்துக் கேட்டறிந்தனர்.

இதையும் படிங்க:ஸ்ரீ ரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் மூன்றாம் நாள் கொண்டாட்டம்.. 'சென்னியோங்கு' பாசுரத்தில் நம்பெருமாள் காட்சி!

ABOUT THE AUTHOR

...view details