கோவையில் மாணவர்களுக்கு பட்டம், மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோயம்புத்தூர்: கோவையில் செவ்வாய்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அதன் தொடர்ச்சியாக அவினாசி சாலையில் உள்ள கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் மாணவர்களுக்கு பட்டமளித்தார். இதில் 148 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் லக்மி இளஞ்செல்வி கார்த்திக், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து, கோவை மசக்காளிபாளையம் பாலன் நகரில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று 5 ஆயிரம் பேருக்கு தையல் இயந்திரம், கிரைண்டர் உட்பட 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய அமைச்சர், "கலைஞரின் நூற்றாண்டு விழா உலகில் தமிழர்கள் வாழும் இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் திராவிட முன்னேற்ற கழக முன்னோடிகள் பேராசிரியர், நாவலர், ஆகியோருக்கும் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. தற்போது கலைஞர் நூற்றாண்டு விழா நடந்து வருகிறது.
கலைஞரின் நூற்றாண்டு விழாவின் முதல் நிகழ்வாக சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள "கலைஞா் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை ஆயிரம் படுக்கை வசதியுடன் திறக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்த நடவடிக்கை எடுத்தவர் கருணாநிதி. இந்தியாவிற்கே வழிகாட்டும் திட்டம் கொண்டு வந்தவர் அவர் என்று புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தான் வாழ்ந்த கோபாலபுரம் இல்லம் மருத்துவமனையாக மாற வேண்டும் என கருணாநிதி கூறியதாக கூறினார். மேலும், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரையில் ரூ.114 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான நூலகம் திறக்கப்பட உள்ளது. நாங்கள் கழக இளைஞரணியில் இருந்து 30 வருடமாக பயணித்து வருகிறோம். ஸ்டாலின் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
கோவை, சென்னை என 11 மாநகராட்சியில் பெண் மேயர் உள்ளனர். பெண்களுக்கு நாட்டில் எங்கும் இல்லாத வகையில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் மூலம் இரண்டு ஆண்டுகளில் ரூ.300 கோடி அளவில் பயணம் செய்துள்ளனர். இது தமிழக வரலாற்றின் சிறப்பு. அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு வரும் செப்டம்பர் 15-ல் உரிமை தொகை அளிக்க முதல்வர் முடிவு செய்துள்ளார். திருமண உதவி திட்டம் உள்பட கருணாநிதி ஏராளமான திட்டத்தை கொண்டு வந்தவர். கலைஞர் நூறாண்டு கடந்து வாழ்வார்” என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், அருள்மொழி, மாநில மருத்துவ அணி இணை செயலாளர் கோகுல் கிருபா சங்கர், துணை செயலாளர்கள் தமிழ் மறை, கோகுல் முருகவேல் ராஜேந்திரன், தொமுச மாநில துணை செயலாளர் தமிழ் செல்வன், மாநில தீர்மான குழு உறுப்பினர் செல்வராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிடமாற்றம்!