கோயம்புத்தூர்: மாநில பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் சிறுவாணி இலக்கிய திருவிழா, கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் நேற்று மற்றும் நேற்றைய முன்தினம் (பிப்.25,26) ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் பங்கேற்று, இலக்கியம் சார்ந்த பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர். மேலும் இதில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ - மாணவிகளும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சியின் நிறைவு விழா பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அவர், சிறுவாணி இலக்கிய திருவிழாவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “இரண்டு நாள் இலக்கிய விழா எழுச்சியோடும் சிறப்போடும் நடைபெற்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி காலத்தில் பிற துறைகளை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதுபோல, தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காகவும், வளர்ச்சிக்காகவும் இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் இதுபோன்று இலக்கிய திருவிழாக்களின் மூலம்தான் தாய் மொழியைப் பாதுகாக்க முடியும். நெல்லை, கோவையைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இலக்கிய திருவிழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் 2வது சுவையான நீர் ‘சிறுவாணி’ என்பதுபோல், இப்பகுதியைச் சேர்ந்த மக்களும் இனிமையானவர்கள். இந்தப் பகுதி எப்படி வணிகத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றதோ, அதேபோல் இலக்கியத்திற்கும் புகழ் பெற்ற பகுதியாகக் கொங்குப் பகுதி உள்ளது.