கோயம்புத்தூர்: சுமார் 95 ஆண்டுகளுக்கு முன் கோயம்புத்தூரிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல, முதன்முதலாக ஆங்கிலேயர்களால் மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் கல்லாற்றின் குறுக்கே தொங்கும் பாலம் அமைக்கப்பட்டது. அதன்பின் போக்குவரத்திற்காக 1925ஆம் ஆண்டு, 65 மீட்டர் நீளம் 10 மீட்டர் உயரத்தில் இரும்பு தூண்களாலான தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. இதன்மீது 10 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டுமென பாலத்தின் முகப்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. பொதுவாக பாலங்கள் அமைத்தால், அதன் தாங்கு திறனுக்காக நிலப்பகுதியில் தூண்கள் அமைப்பது வழக்கம்.
ஆனால் இந்த தொங்கும் பாலத்தில், 65 மீட்டர் நீளத்திற்கு அடிப்பகுதியில் தூண்கள் அமைக்கப்படவில்லை. அதேநேரம் இப்பாலத்தின் மீது செல்லும் வாகனங்களின் எடையை தாங்குவதற்கு, பாலத்தின் மேல் பகுதியில் 15 மீட்டர் உயரத்துக்கு இரும்பு தூண்களால் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தின் வழியாக முதலில் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு சாலை அமைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக காலப்போக்கில் போக்குவரத்து நெரிசல் அதிகமானதைத் தொடர்ந்து, தற்போது இரும்பு தொங்கும் பாலம் அருகே நான்கு தூண்கள் அமைத்து அதன்மீது புதிய உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது.