தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் தனது அதிகாரத்துக்கு விரோதமாக செயல்படுகிறார் - வைகோ விளாசல் - coimbatore news

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகாக்களை பிரித்து கொடுத்து இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

vaiko
வைகோ

By

Published : Jun 16, 2023, 2:00 PM IST

ஆளுநரை விமர்சித்த வைகோ

கோயம்புத்தூர்: சட்டத்திற்கு விரோதமாக பணப் பரிவர்த்தனை செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், கரூரில் உள்ள அவரது இல்லம் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 17 மணி நேர சோதனைக்குப் பிறகு, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்பட்டது.

எனவே, உடனடியாக சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அமலாக்கத் துறையினர் அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவரது இதய ரத்தக் குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பதால் செந்தில் பாலாஜிக்கு உடனடியாக பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கையால் அமைச்சருக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும், சட்ட விரோதமாக அவரை அடைத்து வைத்து பழி வாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் பழிவாங்கும் செயலைக் கண்டித்து கோவையில் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை கோவை சிவானந்த காலனியில் திமுக கூட்டணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய வைகோ, "தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே ஈவு இரக்கமற்ற, மூர்க்கத்தனமான தான்தோற்றித்தனமான காரியங்களை செய்கின்ற ஆளுநர் ஆர்.என்.ரவி ஆட்டம் போட்டு வருகிறார். முதலமைச்சருக்குத்தான் யாரை அமைச்சராக்க வேண்டும் என்ற அதிகாரம் இருக்கிறது.

ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கின்ற நிலையிலேயே இலாகாக்களை பிரித்து கொடுத்து இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என ஆளுநர் சொல்லி இருப்பது அதிக பிரசிங்கத்தனமானது, அயோக்கியத்தனமானது. தமிழ்நாட்டில் இந்த ஆளுநர் இருக்கின்ற வரையில், ஜனநாயகத்தை எப்படி சீர்குலைக்க முயற்சிக்க முடியுமோ, ஆட்சியை எப்படி சீர் குலைக்க வைக்க முடியுமோ என்று செயல்படுகிறார்.

மேலும் பாஜகவின் ஏஜென்டாக, உளவாளியாக ஆளுநர் செயல்படுகிறார். அவருக்கு இருக்கின்ற அதிகாரத்துக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதுபோல ஆளுநர் செயல்படுகிறார். ஆனால், மக்கள் தேர்வு செய்தது ஸ்டாலினைத்தான். ஆர்.என்.ரவியை இல்லை.

ஆளுநர் ரவி மத்திய அரசின் ஒரு வேலைக்காரர், ஏஜென்ட் அவ்வளவுதானே தவிர, அவர் ஒன்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அல்ல என்பதை மறந்து விடக்கூடாது. மத்திய அரசு அனைத்து இடங்களிலும் பாஜகவைக் கொண்டு வந்து இந்தியாவையையே கைப்பற்ற நினைக்கின்றனர். சர்வாதிகாரத்தை நிலைநாட்ட மோடி அரசு முயற்சிக்கிறது. அதில் அவர்கள் தோற்றுப் போவார்கள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Senthil Balaji: செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details