கோயம்புத்தூர் மாவட்டம் பதுவம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சென்னப்பசெட்டி புதூர் பகுதியில் பிரபல கோதுமை மாவு நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிகாரில் இருந்து ஆலைக்கு வந்த ஆறு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் கொடிசியா வளாகத்தில் உள்ள சிகிச்சை மையத்திற்கு நேற்று முன்தினம் (ஜூலை 23) அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து ஆலையில் பணிபுரியும் மற்றவர்களுக்கு கரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக அருகில் உள்ளவர்கள் அச்சத்தால் கடைகளை மூடி உள்ளனர். எனினும் தற்போது வரை இந்த மாவு மில் இயங்கி வருவதால் அங்கு பணிக்கு செல்பவர்களுக்கும் கரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த சுகாதாரத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட ஆலைக்கு சென்று கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் சீல் வைக்கப்போவதாக தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிர்வாகத்தினர் ஆலைக்கு சீல் வைக்கக்கூடாது என அவர்களை திருப்பி அனுப்பினர்.
தொடர்ந்து வழக்கம்போல் பணியாளர்கள் அங்கு பணியாற்றி வருவதால் வைரஸ் பரவலை தடுக்க அலுவலர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. சீல் வைக்க வந்தவர்கள் மிரட்டலுக்கு பயந்து திரும்பி சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், அங்கு பேக்கிங் செய்யப்படும் பொருள்கள் மூலம் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் கேரளா செல்வதாக இ-பாஸ் பெற்ற பிகார் தொழிலாளர்கள் இங்கு வந்துள்ளதாகவும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.