கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அருகே, ஆனைமலை காளியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்கில்பதி பகுதியில், 2015ஆம் ஆண்டு அரசு சார்பில், மலைவாழ் மக்களுக்கு 70 இலவச பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அப்பகுதியில் வழித்தடம் இல்லாததால், மலைவாழ் மக்கள் அப்பகுதிக்கு குடியேறவில்லை என கூறப்படுகிறது.
இதனால், வழித்தடம் வேண்டி அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர், தாசில்தார் அலுவலகத்திற்கு பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்காததாகக் கூறி, மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து, தாசில்தார் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை, அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதனால் அப்பகுதியை ஆய்வு செய்த கிராம நிர்வாக அதிகாரியிடம், அந்த இடத்திற்கு தொடர்பில்லாத ஜெகதீஷ் என்பவர், நிலத்தை அளவீடு செய்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு, அரசாங்க நிலைத்தை தனிநபருக்கு வழங்க முடியாது என அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், காளியாபுரம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில், கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது ஜெகதீஷ் என்பவர் அலுவலகத்திற்குள் புகுந்து, கிராம நிர்வாக அலுவலரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், கிராம நிர்வாக அலுவலரை எரித்து கொன்று விடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி, ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், கிராம நிர்வாக அலுவலகத்தில் தகராறு செய்தது மற்றும் பெண் அதிகாரியிடம் தகாத வார்த்தைகளால் பேசியது தொடர்பாக ஜெகதீஷ் மீது ஆனைமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:எடப்பாடி பழனிசாமியை திகார் ஜெயிலுக்கு அனுப்புவேன்.. ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு!