கோயம்புத்தூர்: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளின் அருகே மக்னா காட்டு யானை ஒன்று ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து வந்தது. மேலும், அருகே உள்ள விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வந்தது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வந்த மக்னா காட்டு யானையை, பொள்ளாச்சியை அடுத்த கோழிகமுத்தி முகாமில் இருந்து கும்கி யானையை வரவழைத்த வனத்துறை குழுவினர், உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் மயக்க ஊசி செலுத்தி, கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி பிடிக்கப்பட்டது. இதன் பின்னர், பிடிபட்ட மக்னா யானை பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள மந்திரி மட்டம் என்னும் பகுதியில் விடப்பட்டது.
மேலும், வனத்துறை அதிகாரிகள் தனிக் குழு அமைத்து, ரேடியோ காலர் பொருத்தி, அந்த மக்னா காட்டு யானையைக் கண்காணித்து வந்தனர். ரேடியோ காலர் பொருத்தப்பட்ட நிலையில் மக்னா யானை வனத்தை விட்டு வெளியேறி கடந்த சில மாதங்களாக பொள்ளாச்சி வனச்சரகம் தம்பம்பதி மலை அடிவாரப் பகுதிகளில் நடமாடி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, அங்கிருந்து வெளியேறி ஆனைமலை அடுத்த சரளபதி அருகே முகாமிட்டு, அங்குள்ள பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. மேலும், விளைநிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் அங்குள்ள பொதுமக்கள் யானையை பிடித்து கும்கியாக மாற்ற வேண்டும் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு, கோரிக்கை வைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.