கோயம்புத்தூர்: குனியமுத்தூர் பகுதியில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கோவையில் கடந்த 22, 23ஆம் தேதிகளில் தமிழ்நாடு அரசு சார்பாக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் 92 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் 100 கோடி ரூபாய் வரை ஒப்பந்தங்கள் போடப்பட்டன. புதிய தொழில்கள் குறித்து அறிவிப்புகள் கொடுத்தாலும் செயல்பாட்டுக்கு வருவதில்லை. கோவை தனது தொழில் முகவரியை இழந்துவருகிறது.
தொழில் துறையில் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருப்பதை மறு சீரமைப்பதற்கான அறிவிப்புகள் முதலீட்டாளர் மாநாட்டில் இல்லை. நிரந்தரமாக சிறு, குறு தொழில்கள் சிறப்பு பெற்றிருந்த மாவட்டமாக மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறு வழிச் சாலை
கோவையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் சிறு, குறு தொழில்முனைவோருக்குப் பலனில்லை. சிறு முதலீட்டாளர்கள் கருத்தைக் கேட்டு ஜனவரி முதல் வாரத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கருத்தரங்கம் நடத்த முடிவெடுத்துள்ளோம். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பழைய நிலையை ஏற்படுத்த வேண்டும்.
நல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கோவை - திண்டுக்கல் சாலையை ஆறு வழிச் சாலையாகவோ, எட்டு வழிச் சாலையாகவோ மாற்ற வேண்டும். கோவை திருச்சி சாலையையும் எட்டு வழிச் சாலைகளாக மாற்ற வேண்டும்.