கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பன்னிமடையில் கடந்த மார்ச் மாதம் ஆறு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சந்தோஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, சந்தோஷ் குமாரை குற்றவாளி என அறிவித்தார். பின் தண்டணை விபரத்தை மாலை 3 மணிக்கு நீதிபதி ராதிகா தீர்ப்பை வாசித்தார். அதில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக போக்சோ பிரிவின் அடிப்படையில் வாழ்வின் இறுதிக் கட்டம் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்கவும், சிறுமியைக் கொலை செய்ததற்கு தூக்கு தண்டனையும், தடயங்களை மறைத்ததற்காக ஏழு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்திரவிட்டார்.
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்திலிருந்த ஜனநாயக மாதர் சங்கத்தினர் முழக்கங்கள் எழுப்பி தீர்ப்பினை வரவேற்றனர்.
இதுகுறித்து பேட்டியளித்த உயிரிழந்த சிறுமியின் தாயார்,
"குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இந்த தீர்ப்பு இருக்க வேண்டும். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியும் கண்டு பிடித்து தூக்கிலிடப்பட வேண்டும். மிக விரைவில் அந்த இன்னொரு குற்றவாளியை காவல்துறை கைது செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி வனஜா நடராஜன், "இந்த தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன், எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இதை பார்க்கின்றோம். இன்னொரு குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.