கோவை: மத்திய அரசுத் திட்டத்தின்கீழ் கேலோ இந்திய விளையாட்டுப் போட்டி கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் வரும் 19ஆம் முதல் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே இப்போட்டிகளில் தமிழ்நாட்டு வீரர்கள் கலந்து கொள்வதற்காகத் தேர்வு போட்டிகள் நடைபெறவுள்ளது.
கேலோ இந்தியா போட்டிகளில் தென் மண்டலம் அளவிலான பெண்கள் வுஷு போட்டிகள் கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் நாளை முதல் 21ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இது குறித்து வுஷு அமைப்பின் அகில இந்தியச் செயற்குழு உறுப்பினர் சபீர் கூறுகையில், "மத்திய அரசின் கேலோ இந்தியத் திட்டத்தால் விளையாட்டுத் துறையில் பெண்கள் தங்களது திறமைகளைத் தேசிய அளவில் வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இப்போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் மண்டல அளவிலும் இறுதிப்போட்டிகள் தேசிய அளவிலும் நடைபெற்ற வருகின்றன. வடக்கு மண்டல அளவிலான போட்டிகள் உத்தரகண்ட் மாநிலத்திலும், கிழக்கு மண்டல அளவிலான போட்டிகள் அசாம் மாநிலத்திலும், மேற்கு மண்டல அளவிலான போட்டிகள் கோவாவிலும் மற்றும் தெற்கு மண்டல அளவிலான போட்டிகள் தமிழ்நாட்டிலும் நடைபெறுகின்றன.