கோவை சோதனைச் சாவடிகளில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர வாகன தணிக்கை கோயம்புத்தூர்:கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, கோவையில் தமிழக - கேரள எல்லையான 13 சோதனை சாவடிகளில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மேற்பார்வையில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், கோவையில் உள்ள முக்கிய தேவாலயங்கள், கோயில்கள், மசூதிகள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தமிழக - கேரளா எல்லையான வாளையாறு சோதனை சாவடியில், மோப்ப நாய் உதவியுடன் வாகன தணிக்கை நடைபெறுவதை எஸ்.பி.பத்ரிநாராயணன் நேரில் பார்வையிட்டார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "கேரள குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கோவையில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சோதனை சாவடியிலும் உதவி ஆய்வாளர் தலைமையில் நான்கு லோக்கல் காவலர்கள், நான்கு AR போலீஸ் போடப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.
கோவையில் உள்ள சோதனைச் சாவடிகளில், வாளையார் சோதனைச் சாவடி மிகவும் முக்கியமானது. எனவே, இந்த சோதனை சாவடியில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 40 பீட்-களுக்கு காவலர்கள் செல்லும் நிலையில், தற்பொழுது 65 பீட் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் கூட்டம் அதிகம் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. ஒரு ஏ.டி.எஸ்.பி, ஐந்து டி.எஸ்.பி, 20 காவல் ஆய்வாளர்கள் என அனைவரும் மதியத்தில் இருந்து, மாவட்டம் முழுவதும் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இது மேலும் தொடரும்.
மக்கள் அனைவரும் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். காவல்துறை அனைத்தையும் எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளது. பொதுமக்கள் சந்தேகத்திற்கு இடமான ஏதேனும் விஷயங்களைப் பார்த்தால், உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். சோதனை சாவடிகளில் காவல் துறையினர் சோதனைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:கேரளா குண்டுவெடிப்பு: எதற்காக குண்டு வைத்தேன்? சரணடைந்தவர் கூறுவது என்ன?