வனவிலங்குகள் மீதான அன்பை மட்டுமே பிரதானமாக கொண்டு உயிரை பணயம் வைத்து நேசிப்போடு செய்யும் பணி வனத்துறையினருடையது. குறிப்பாக, வனத்துறையில் பணியாற்றும் கால்நடை மருத்துவர்களின் நிலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
சொன்னால் கேட்டுக்கொள்ளும் விலங்குகளை பார்த்துப் பழகிய நமக்கு வனவிலங்குகள் எப்போதுமே அந்நியம்தான், யதார்த்தம் இப்படி இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானைக் குட்டி ஒன்று உடல்நலக்குறைவால் சாகும் நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. விரைந்து வரும் வனத்துறை மருத்துவக் குழுவை அருகில் வரவிடாமல் தடுத்த தாய் யானையை விரட்டிவிட்டு, குட்டி யானை அருகில் சென்றால் அது 80% உயிரற்ற நிலையில் கிடக்கிறது.
பரபரப்பான இரண்டு நாள் தொடர் மருத்துவ கவனிப்பிற்கு பின் யானைக் குட்டி மீண்டும் அதன் தாயுடன் சேர்ந்தது. அந்தத் தாய் யானை கண்களில் நீர் பெருக நன்றியுடன் பார்த்தது, கிருஷ் அசோகன் என வன உயிரின ஆர்வலர்களால் அன்புடன் அழைக்கப்படும் தமிழ்நாடு வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகனை.
1990-இல் எல்லா கால்நடை மருத்துவர்களையும் போல் சாதாரணமாக பணியில் இணைந்த அசோகனுக்கு, அப்போது யானை மருத்துவர் என அழைக்கப்பட்ட மருத்துவர் கிருஷ்ணமூர்த்தியின் பணிகள் மீது தீராக் காதல். அவருடன் பல ஆண்டுகள் பயணித்ததன் மூலம் காட்டு யானைகள் மீதான அன்பு அதிகரித்தது.
மருத்துவர் அசோகன் தனது 30 ஆண்டு பணி காலத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட யானைகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். அவர் தன் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.