தொழில் முனைனவோர் எதிர்க்கும் சர்பாசி சட்டம் கோயம்புத்தூர்:தொழில் முனைவோர்களுக்காக சர்பாசி சட்டம் என்ற சிறப்புச் சட்டத்தை 2002 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த சட்டத்தின் படி இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நீதிமன்றங்களின் தலையீடு எதுவுமின்றி கடன் செலுத்தாதவர்களின் சொத்துக்களை விற்கவோ ஏலமிடவோ முடியும் என சட்டம் சொல்கிறது.
இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தில் கடன் வாங்கிய தொழில் நிறுவனங்கள் கடன் தவணையை செலுத்துவதற்கு ஆறு மாத காலங்கள் அவகாசம் அளித்த நிலையில், அண்மையில் இந்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து தவணை செலுத்தும் காலத்தை மூன்று மாத காலமாக மாற்றியது.
இது பல்வேறு தொழில்முனைவோர்களை அதிர்ச்சியடையச் செய்தது. பல்வேறு தொழில் முனைவோர்கள் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்கள் இந்த சட்டத்தை எதிர்க்க துவங்கினர். சிலர் இந்தச் சட்டத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தொழில் முனைவோர்கள் எதற்காக இந்த சர்பாசி சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றும், இதில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறுயதாவது, "குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வங்கியின் மூலம் வாங்குகின்ற கடன்களுக்கு தருகின்ற சொத்துக்களை, மூன்று மாத காலத்திற்குள் தவணைத் தொகை செலுத்தவில்லையென்றால் அந்த சொத்தை பறிமுதல் செய்வதற்கு வங்கிகளுக்கு முழுமையான அதிகாரத்தை கொடுக்கின்ற சட்டமாக சர்பாசி சட்டம்(Sarfaesi Act) இருந்து வருகிறது.
கடந்த காலங்களில் ஆறு மாத காலம் தவணை கட்டுவதற்கு அவகாசம் அளித்து வந்த நிலையில், தற்போது மூன்று மாதமாக மாற்றப்பட்டு, தவணை செலுத்தாதவர்களின் சொத்துக்களை ஏலம் விடுவதற்கு முழு சுதந்திரத்தை இந்தச் சட்டம் வழங்கியுள்ளது. இந்தச் சட்டம் தொழில் முனைவோர்களை கடனாளியாக்கும் சட்டமாக உள்ளது. கோவையிலும் கூட இது போன்ற ஒரு நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது.
தொழில் முனைவோர் ஒருவர் 1 கோடியே 35 லட்சம் கடன் வாங்கி இருந்த நிலையில், கரோனா காலத்தில் அதனை செலுத்த முடியாமல் போனது. எனவே அதனை எல்லாம் காரணம்காட்டி இந்தச் சட்டத்தின் கீழ் அவர் கொடுத்திருக்கின்ற சொத்து மதிப்புகளை பறிமுதல் செய்யப் போகிறார்கள். நீதிமன்றங்களுக்கு சுமையை குறைப்பதற்கு கொண்டுவரப்பட்ட சட்டம் என கூறப்படுகிறது. தேசிய பேரிடர் ஏற்படும் போதெல்லாம் இந்தச் சட்டத்தை பயன்படுத்தினால் இந்த தொழிலை நடத்தவே முடியாது.
எனவே இந்தச் சட்டத்தில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும். தவணையை கட்டுவதற்கு ஆறு மாத காலம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த சொத்துக்களை ஏலம் விடுவதற்கு முன்பாக, அதற்கான நடவடிக்கை முறையாக எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆராய வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்த இந்தச் சட்டத்தில் பறிமுதல் செய்வதற்கு எப்படி அதிகாரம் உள்ளதோ அதேபோல் பாதுகாப்பதற்கும் இதில் வழிவகை உள்ளது. அதனை எந்த வங்கிகளும் செயல்படுத்துவதில்லை.
குறு சிறு தொழில்களை பொருத்தவரை தேசிய வங்கிகளில் கடன் கேட்டு செல்கின்ற போது, பல்வேறு நெருக்கடிகளுக்கு தொடர்ந்து ஆளாக்கப்பட்டு வருகிறோம். இப்படிப்பட்ட நேரத்தில் அதற்கெல்லாம் தனியார் வங்கிகள் சலுகை அளிக்கிறார்கள். அதிக கடன் அளிப்பதற்கும் தனியார் வங்கிகள் கூறுகின்ற போது, இதனை நம்பி பல்வேறு தொழில் முனைவோர்கள் கடன் பெறுகிறார்கள். அப்படி கடன் வாங்கிய பிறகு கடனை செலுத்த முடியாமல் செல்லும் போது, பல்வேறு கிடுக்குபிடிகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
தேசிய வங்கிகளை பொறுத்தவரை கடன் கொடுப்பதில் எளிமைப்படுத்த வேண்டும். தனியார் வங்கிகளிடம் கடன் பெற வேண்டும் என்று எந்த தொழில் முனைவோரும் ஆசைப்படுவதில்லை. ஆனால் தேசிய வங்கிகளில் இருக்கக்கூடிய கெடுபிடிகள் நெருக்கடிகள் கடன் கிடைப்பதற்கு காலத்தாமதம் ஆவதால்தான், தனியார் வங்கிகளுக்கு செல்கிறார்கள்.
ஆர்பிஐ வங்கிக்கு கூட சில தனியார் வங்கிகள் கட்டுப்படுவதில்லை. அப்படி இருந்தால் அது போன்ற தனியார் வங்கிகளை எதற்கு அனுமதிக்க வேண்டும். எந்த வங்கியாக இருந்தாலும் ரிசர்வ் வங்கிக்கு கட்டுப்பட வேண்டும் மாவட்ட முன்னோடி வங்கிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சோழபுரம் நாட்டு வைத்தியர் வீட்டில் குவியலாக எலும்புக் கூடுகள்! போலீசாரின் மௌனத்தால் பொதுமக்கள் பீதி!