கோயமுத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் ஒரு சில நபர்களை மட்டுமே அழைத்து கூட்டம் நடத்தி உள்ளார்கள். இந்தக் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சிக்கு அழைப்பு விடுக்காதது ஏற்புடையது அல்ல.
கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. முழு ஊரடங்கிற்கு அரசுகள் தள்ளிக் கொண்டு இருக்கின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்துகள் தட்டுப்பாடு போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. இதற்கு ஆளுநர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி மாவட்ட, ஊராட்சி அளவில் தகுந்த கட்டுப்பாடுகளைச் செய்ய வேண்டும்.
புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வருகின்ற ஒன்றாம் தேதியிலிருந்து பல்வேறு ஊராட்சிகளில் மாணவர் அமைப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இன்றைய சூழலில் இந்தியாவிற்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். முகக்கவசங்கள் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதைவிட முகக்கவசங்கள் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.