கோயம்புத்தூர்: கணபதி அடுத்த காந்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் என்கிற லவேந்திரன்(49). இவரது மனைவி கவிதா (32). கவிதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி மகன் உள்ள நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குமாரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
குமார் கட்டிட பணி செய்து வருகிறார். கவிதா வீட்டு அருகிலுள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார். கவிதா செல்போனில் நண்பர்களுடன் பேசி வந்த காரணத்தினால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சண்டையிட்டு கவிதா அவரது நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று (ஜுன் 21) மாலை வீடு திரும்பிய கவிதாவிற்கும் குமாருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் குமார் கவிதாவை கிரிக்கெட் மட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கவிதா உயிரிழந்தார். குமார் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார்.