கோயம்புத்தூர்:கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தற்போதைய ஆளும் கட்சியான திமுகவின் பிரச்சாரங்களில் அனல் பறந்த வாக்குறுதி என்றால் அது, மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு தான். தேர்தல் பிரச்சாரத்தின் போது, குடும்ப தலைவிகளுக்கு உதவும் வகையில் அனைத்து அட்டைதாரர்களுக்கும் மகளிர் உதவித் தொகை வழங்கப்படும் என திமுக சார்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த வாக்குறுதி திமுகவின் பிரச்சார வாக்குறுதிகளில் முதன்மை பெற்று மக்களிடத்திலும் பெரும் நம்பிக்கையைப் பெற்றுத்தந்தது. ஏன் இன்னும் சொல்ல போனால், இந்த வாக்குறுதிகளால், அதீத அளவில் பெண்களின் வாக்கை பெற்ற கட்சியாக மாறியது திமுக. இதனால் திமுக தமிழகத்தில் தன் வெற்றியை மீண்டும் நிலைநாட்டியது.
இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக, நிதிநிலையை காரணம் காட்டி இந்த திட்டத்தை அமல் படுத்தால் நிலுவையில் வைத்திருந்தது. மாநிலத்தின் நிதி நிலை சீரமைக்கப்பட்ட பின்னர் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார். இதனையே காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்யவும் ஆரம்பித்தன.
இதனால் சுதாரித்துக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து கூட்டங்களிலும் திமுக "சொன்னதை செய்யும், சொல்லாததையும் செய்யும்" கட்சி என்று ஆவேசமாக பேசத் தொடங்கினர். குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்காக நடப்பாண்டு பட்ஜெட் தொடரில் 7000 கோடி ரூபாய் ஒதுக்கி எதிர்க்கட்சிகளில் குற்றச்சாட்டுகளுக்கு ஒருவிதமாக முற்றுப்புள்ளி வைத்தார்.
அதோடு நிற்காமல் இந்த திட்டமானது வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிப்பு வெளியானது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' என திட்டத்தை அறிவித்துவிட்டு அதற்கு பல்வேறு விதிமுறைகளை வெளியிட்டது தான். அரசின் விதிமுறைகளால் 80 விழுக்காடு குடும்பத் தலைவிகளுக்கு இந்த திட்டம் சென்று சேராது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட திமுக கூட்டணியில் இல்லாத எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' கீழ் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் மற்றும் திட்ட செயல்பாடுகளை ஒருங்கிணைக்க ஏதுவாகவும், விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும் இடங்கள், நாட்கள் போன்ற விவரங்கள் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு, மாவட்ட மற்றும் வட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையின் தொலைப்பேசி எண் 0422- 2300569 மற்றும் வாட்ஸ்அப் எண்-9445045614 அமைக்கப்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் விண்ணப்பத்தாரர்களின் சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பப் பதிவு நாளன்று நடைபெறும் நிகழ்வுகளை கண்காணித்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு வட்டத்திற்கும் தனித்தனி துணை வட்டாசியர்களை நியமித்துள்ளது.
- ஆனைமலை வட்டம் - அனுசியா, துணை வட்டாட்சியர் - 04253-296100
- அன்னூர் வட்டம் - ஜெயபாரதி, துணை வட்டாட்சியர் - 04254-299908
- கோயம்புத்தூர் வடக்கு வட்டம் - ராஜேந்திரன், துணை வட்டாட்சியர் - 0422-2247831
- கோயம்புத்தூர் தெற்கு வட்டம் - தேவி, துணை வட்டாட்சியர் - 0422-2214225
- கிணத்துக்கடவு வட்டம் - செல்லதுறை, துணை வட்டாட்சியர் - 04259-241000
- மதுக்கரை வட்டம் - ராமராஜ், துணை வட்டாட்சியர் - 0422-2622338
- மேட்டுப்பாளையம் வட்டம் - தெய்வப்பாண்டியம்மாள், துணை வட்டாட்சியர் - 04254-222153
- பேரூர் வட்டம் - செந்தில்குமாரராஜன், துணை வட்டாட்சியர் - 0422-2606030
- பொள்ளாச்சி வட்டம் - சுப்ரியா, துணை வட்டாட்சியர் -04259-226625
- சூலூர் வட்டம் - மோகனப்பிரியா, துணை வட்டாட்சியர் - 0422-2681000
- வால்பாறை வட்டம் - மோகன்பாபு, துணை வட்டாட்சியர் 04253-222305
இப்படி அனைத்து வட்டத்திற்கு துணை வட்டாட்சியர் தலைமையில் தனித்தனி உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு பொதுமக்களின் சந்தேகங்களை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க:தெருவோர கடைகளுக்கான வாடகை வசூல் செய்யும் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு: நீதிமன்றம் சரமாரி கேள்வி