கோவை: கருமத்தம்பட்டியை சேர்ந்த கனகராஜ் என்பவர் திருப்பூர் மாவட்டம் எம்.நாதம்பாளையம் அரசு துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பாரம்பரிய கலைகளில் அதிக ஆர்வம் கொண்ட அவர் கொங்கு மண்டலத்தின் பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்க 2012ஆம் ஆண்டு சங்கமம் கலைக் குழுவை ஏற்படுத்தி அதில் ஒயிலாட்டம், வள்ளி கும்மி , காவடி ஆட்டம் ஆகிய கிராமிய கலைகளை கிராமப்புற இளைஞர்கள், இளம் பெண்கள், பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக கற்றுக்கொடுத்து வருகிறார்.
இதுவரை 40 கிராமங்களை சார்ந்த 2000க்கும் அதிகமானோருக்கு கற்றுக்கொடுத்து அரங்கேற்றம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "சங்கமம் கலைக் குழுவால் கொங்கு மண்டலத்தில் அழிந்து போன பல நாட்டுப்புற கலைகள் உயிர் பெற்று வருகிறது. நாட்டு புறக்கலைகள் உயிர்ப்போடு இருந்தால் தான் அந்த நாட்டின் பாரம்பரியம் காப்பாற்றப்படும். இதற்காக ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று கலை ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்து 6 மாதம் பயிற்சி வழங்கி கலைக்குழுவை உருவாக்கி வருகிறோம்.
தமிழ்நாட்டில் 120 பாரம்பரிய கலைகள் உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதில் கொங்கு மண்டலத்தில் ஒயிலாட்டம், காவடி ஆட்டம், வள்ளி கும்மி, சலங்கை ஆட்டம் ஆகியவை முக்கியமானவை. ஒரு சில இடங்களில் மட்டுமே ஆடப்பட்டு வரும் நிலையில், இந்த கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
கோவை மட்டுமல்ல அண்டை மாவட்டங்களிலும் இக்கலையை இலவசமாக கற்றுக்கொடுத்து வரும் நிலையில், கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலைகளை வெளிநாட்டினரும் அறிந்து கொள்ளும் வகையில் மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் சென்று ஒயிலாட்டத்தையும் காவடியாட்டத்தையும் அரங்கேற்றம் செய்துள்ளதாகவும், சங்கமம் கலைக்குழு கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அரங்கேகேற்றத்தை நடத்தியுள்ளது என தெரிவித்தார்.