தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த மிளகு வியாபாரம் செய்துவரும் வசந்தகுமார் என்பவரிடம், கோவையிலிருந்து ஆன்லைன் மூலம் தொடர்புகொண்ட ஒரு கும்பல் தாங்கள் காரமடை பகுதியைச் சேர்ந்த் மிளகு வியாபாரிகள் என்று அறிமுகப்படுத்தியுள்ளனர். பின்னர் தங்களுக்கு ஒரு டன் மிளகு தேவைப்படுவதாகவும், அதற்கான தொகையை மிளகு வந்தவுடன் நேரில் தருவதாகவும் தெரிவித்து, தவறான முகவரியையும் அளித்துள்ளனர்.
இதை நம்பி இன்று (செப்.27) தேனி மாவட்டத்திலிருந்து வசந்தகுமார், ஒரு டன் மிளகு மூட்டைகளை சரக்கு வாகனத்தில் அனுப்பியுள்ளார். கோவையில் போலியான முகவரியை தேடி அலைந்த ஓட்டுநர் சிவக்குமார் என்பவர், ஆட்டோவை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு ஒரு கடையின் முன்புறமாக படுத்து உறங்கியுள்ளார். இதனை நோட்டமிட்டு வந்த கும்பல், வாகனத்திலிருந்த குறுமிளகு மூட்டைகளை வேறு ஒரு வாகனத்தில் மாற்றி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து எழுந்த ஓட்டுநர், மிளகு மூட்டைகள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக பெரியாநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து அடையாளம் தெரியாத கும்பலைத் தேடியுள்ளனர்.