அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 2018ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் கோவை லாலிரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று அதிகாலையில் சென்ற காவல் துறையினர் அவரைக் கைது செய்து சூலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதிமுக பெயரில் போலி இணையதளம் தொடங்கி ஆட்களைத் தேர்ந்தெடுத்தகாக, சூலூர் முத்துகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தவேல் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது.
முன்னாள் எம்.பி. கே.சி பழனிசாமி கைது சூலூர் காவல் நிலையத்தில் அவர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 417 - ஏமாற்றுதல், 418 - நம்பியவர்களை ஏமாற்றுதல், 419 - ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், 464 - தவறான ஆவணத்தை உருவாக்குதல், 465 - பொய் ஆவணம் உருவாக்கி ஏமாற்றுதல், 468 - ஏமாற்ற திட்டமிட்டு ஆவணம் உருவாக்குதல், 479 - சொத்து குறீயட்டை தவறாக பயன்படுத்துதல், 481 - தவறான சொத்து குறியீட்டை பயன்படுத்துதல், 482 - சொத்து குறியீட்டை தவறாக பயன்படுத்தியதற்கு தண்டணை, 485 - சொத்து அடையாளத்தை உருவாக்கும் கருவியை வைத்திருந்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு போட்ட அதிமுக!