தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சி.வி. சண்முகம் பின்னால் சென்றால் அனைத்தும் ஒழிந்துவிடும் - எடப்பாடி பழனிசாமிக்கு புகழேந்தி எச்சரிக்கை! - o panneerselvam

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, ' எடப்பாடி பழனிசாமி, சி.வி. சண்முகத்திற்குப் பின்னால் சென்றால் அனைத்தும் ஒழிந்துவிடும்' என எச்சரித்துள்ளார்.

சிவி சண்முகம் பின்னால் சென்றால் அனைத்தும் ஒழிந்து விடும்- எடப்பாடி பழனிச்சாமிக்கு புகழேந்தி எச்சரிக்கை
சிவி சண்முகம் பின்னால் சென்றால் அனைத்தும் ஒழிந்து விடும்- எடப்பாடி பழனிச்சாமிக்கு புகழேந்தி எச்சரிக்கை

By

Published : Jun 24, 2022, 9:51 PM IST

கோயம்புத்தூர்:அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிமுக பொதுக்கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகிறது என காமெடி செய்து வருகிறார். 23 தீர்மானங்களில் எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது; எந்த தீர்மானமும் மேற்கொண்டு எடுக்கக்கூடாது என உத்தரவு உள்ள நிலையில் அந்த தீர்மானங்கள் நிராகரிக்கப்படுகிறது எனக் கூறினால் எதற்காக தயார் செய்ய வேண்டும்?

அங்குள்ளவர்கள் சி.வி. சண்முகத்திற்கு பயப்படுகிறார்கள். டிசம்பர் 1ஆம் தேதி செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் ஐந்து ஆண்டுகள் காலம் நீடிக்கலாம் எனும் தீர்மானம் எம்ஜிஆரால் கொண்டுவரப்பட்ட 'பைலா(By-law)'. அதனைத் திருத்தச்சென்று தான் தற்போது பெரும் சர்ச்சை நீடித்து வருகிறது.

பொதுக்குழுவில் ரவுடிகள்: ஓ.பன்னீர் செல்வம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எதற்கு? 11 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்டு வந்ததற்காகவா அவர் மீது தாக்குதல் நடத்தினீர்கள்? முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் என அறிவித்ததற்கா தாக்கினார்கள்?. பொதுக்குழுவில் ரஷ்ய - உக்ரைன் போர் போல் அடித்துக்கொள்கிறார்கள். சி.வி. சண்முகம் பொதுக்குழு செல்லாது எனக் கூறுகிறார். அப்படி பொதுக்குழு செல்லாது என்றால் இப்பொழுது நீ எம்.பி., ஆக இருக்க முடியாது.

நாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளோம். பொதுக்குழுவின்போது காவல் துறையோ அதனை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ சிறிது ஏமாந்து இருந்தால் ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் பொதுக்குழுவில் இருந்து முழுமையாக திரும்பி இருக்க முடியாது. அதிமுகவைப் பொறுத்தவரை தீர்மானங்கள் எழுதி நீதிமன்றம் உத்தரவிட்டபின் தூக்கி எறியப்பட்ட முதல் கூட்டம் இதுதான்.

பொதுக்குழுவில் மூன்று வரிசைகளில் ரவுடிகளை அமர வைத்து ரவுடிசம் செய்துள்ளார்கள். பொதுக்குழுவில் இதுபோன்ற செயல்களைத் தூண்டிவிட்டதற்கு பழனிசாமி தான் காரணமாக இருக்கக்கூடும். வரும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூடாது. குழப்பத்தை ஏற்படுத்தி அனைவரின் பதவியும் போவதற்கு சி.வி. சண்முகம் காரணமாக அமைகிறார்’ எனத் தெரிவித்தார்.

அதிமுகவை ஒழிக்க வேண்டுமென முடிவு: ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணம் குறித்து கேட்ட போது, 'ஓ.பன்னீர் செல்வம் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான பணிகளுக்குத் தான் டெல்லி சென்றுள்ளதாக தகவல். அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. மேலும் கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி, திமுக-வை எச்சரிக்கிறேன். பொதுக்குழுவை பார்த்து திமுக பயப்படுகிறது எனக் கூறுகிறார்.

எனக்கு சிரிப்பு தான் வந்தது. அடித்துக்கொள்வது நீங்கள். உங்களை பார்த்து ஏன் திமுக பயப்பட வேண்டும் என எனக்குத் தெரியவில்லை. பொதுக்குழு தீர்மானத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்காத திமுகவிற்கு கண்டனம் என உள்ளது. ஏன் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை?

அதிமுகவை ஒழிக்க வேண்டுமென முடிவெடுத்துவிட்டார்கள். இந்த கட்சி சாதிக் கட்சியாக மாறிவிட்டது. ஜெயலலிதா இருந்தபொழுது பன்னீர்செல்வத்தை தான் அருகில் அமரவைத்து ஆலோசனை மேற்கொள்வார். என்றைக்காவது பழனிசாமியை அழைத்து ஆலோசனை கேட்டது உண்டா? சசிகலாவின் காலை பிடித்து கிடைத்த இந்த அதிகாரத்தையும் ஆணவத்தையும் பாருங்கள்.

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய மூவருக்கும் ஓட்டெடுப்பு நடத்தி திறமையை நிரூபித்துக் கொள்வோம். எடப்பாடி பழனிசாமிக்கு கவர் கொடுத்துதான் பவர் வந்தது. எடப்பாடி பழனிசாமி, சி.வி. சண்முகத்திற்கு பின்னால் சென்றால் அனைத்தும் ஒழிந்துவிடும்' எனத் தெரிவித்தார்.

பின்னர் சசிகலா குறித்த கேள்விக்கு, 'சசிகலாவை அழைத்துப் பார்த்தோம். அவர்கள் வரவில்லை. வந்தால் நன்றாக இருக்கும்' எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க:மாமூல் வாங்கும் காவல் துறையினருக்கு குற்றவியல் நடவடிக்கை - உயர் நீதிமன்றம் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details