கோயம்புத்தூர் மாவட்டம் மாங்கரை அடுத்த ஆனைகட்டி பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள இங்கு, ஏராளமான யானைகள் உள்ளன. இங்குள்ள யானைகள் அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது வழக்கம். இந்நிலையில் ஆனைகட்டி, அடுத்த ஜம்புகண்டி என்ற இடத்தில் வாயில் அடிபட்ட நிலையில் யானை ஒன்று நிற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் சுரேஷ் தலைமையில் அங்கு சென்ற வனத்துறையினர், யானையை கண்காணித்தனர். வாயில் காயம்பட்ட 12 வயது ஆண் யானைக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், காயம்பட்ட யானைக்கு வனத்துறை மருத்துவர் சுகுமார் சிகிச்சை அளித்து வருகிறார். வாழை, பலாப்பழத்தில் மருந்து வைக்கப்பட்டு யானைக்கு சாப்பிட கொடுக்கப்பட்டு வருகிறது.
ஜம்புகண்டி பகுதியில் சுற்றித்திரிந்த காயம்பட்ட யானைக்கு சிகிச்சை இது குறித்து வனத்துறை மருத்துவர் சுகுமார் கூறுகையில், "இந்த ஆண் யானைக்கு 12 வயது இருக்கும். உணவு உட்கொள்ளும்போது வாயில் மரக்குச்சிகள் குத்தியதில் காயம் ஏற்பட்டு இருக்கலாம். நாட்டு வெடியால் ஏற்பட்டது காயம் போல் தெரியவில்லை. காலை முதல் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில தினங்களுக்கு இதேபோன்று சிகிச்சை அளிக்க உள்ளோம்" என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் கருவுற்ற பெண் யானை வெடி மருந்து கலந்த பழங்களை உண்டு உயிரிழந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவையில் அதேபோல் வாயில் காயம்பட்ட யானை சுற்றித்திரிந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:3 மணி நேர போராட்டம் - பட்டாசு சத்தத்தை பொருட்படுத்தாத யானைக் கூட்டம்