மேட்டுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் உலா வரும் பாகுபலி யானையை இடமாற்றம் செய்ய வனத்துறை முடிவு!! கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் வனச்சரகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைத்துள்ளது. கேரளாவில் இருந்து நீலகிரிக்கு யானைகள் வலசை செல்லும் முக்கிய யானை வழித்தடமாக மேட்டுப்பாளையம் கல்லாறு வனப்பகுதி உள்ளது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் வனச்சரகத்திலும் அருகே பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதி உள்ளதால் சிறுமுகை வனச்சரகத்திலும் யானைகள் நடமாட்டம் காணப்படும்.
கோடை காலங்களில் நூற்றுக்கணக்கான யானைகள் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் காணப்படும். இந்த நிலையில், இவ்வாறு சிறுமுகை வனப்பகுதிக்கு வந்த ஆண் காட்டு யானை ஒன்று சிறுமுகை வனப்பகுதியிலேயே தங்கியது. அங்கிருந்து மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு அடிக்கடி வந்து சென்றது. யானையின் ஆஜானுபாகுவான உடல் அமைப்பு, நீண்ட தந்தம் இவற்றை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த ஆண் காட்டு யானைக்கு பாகுபலி என பெயரிட்டு அழைத்து வந்தனர்.
மேலும் விவசாயப் பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தியதால், அந்த யானையை இட மாற்றம் செய்ய வேண்டும் என மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் பொறுத்தி கண்காணிக்க வனத் துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால், அந்தத் திட்டம் தோல்வி அடைந்ததால் அதனை கைவிட்டனர். தொடர்ந்து பாகுபலி யானையானது மாலை நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்த யானை நாள்தோறும் வனப்பகுதியில் இருந்து வெளியேறும்போது பத்திரகாளியம்மன் கோயில் சாலை சமயபுரம் பகுதி வழியாக கடந்து செல்வது வழக்கம். அதனை நாள்தோறும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி உள்பட இரண்டு யானைகள் உதகை - மேட்டுப்பாளையம் சாலையை கடந்து பிரபல உணவக வளாகத்திற்குள் புகுந்தது.
பின்னர் அங்கும் இங்கும் சுற்றிய யானைகள் தனியார் தோட்டம் வழியாக சமயபுரம் பகுதிக்குள் சென்றது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ”பாகுபலி யானை பகல் முழுவதும் வனப்பகுதிக்குள் இருந்து விட்டு இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்புக்குள் புகுந்து விவசாய நிலங்களில் நுழைந்து வருகிறது. அதன் காரணமாக பயிர் சேதம் ஏற்படுவதும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழலும் உள்ளது.
மேலும் பாகுபலி யானையானது விவசாய நிலங்களுக்குள் போகும்போது, அங்கு அமைக்கப்பட்டுள்ள மின் வேலிகளை உடைத்துக் கொண்டு உள்ளே செல்வதால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், உடனடியாக இந்த யானை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும்” என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க சிறுமுகை பணச்சாரத்தில் இருந்து கூடுதல் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில் ”பாகுபலி தற்போது மற்றொரு ஆண் யானையையும் அழைத்து வருவதால், இந்த இரண்டு யானைகளையும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் பாகுபலி யானையுடன் மற்றொரு யானை சேர்ந்துள்ளதால், இந்த இரண்டு யானைகளையும் கண்காணிக்க சிறுமுகை வனச்சரகத்தில் இருந்து கூடுதல் வனப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு வார காலத்திற்கு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிப்பார்கள்.
அதன் பின்னர் பாகுபலியின் நடமாட்டம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து, அதனை இடமாற்றம் செய்யவோ அல்லது ரேடியோ காலர் கருவி பொறுத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார். ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தும் திட்டம் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கோவையில் ராட்சத பேனர் சரிந்த விபத்தில் 3 தொழிலாளிகள் பலி