கோயம்புத்தூர்:பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி. இவர் கடந்த ஜூன் 14-ஆம் தேதி இரவு அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு உணவருந்த சென்று உள்ளார். அப்போது அவர் அவரது காரில் 30 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து விட்டு சென்று உள்ளார். உணவருந்தி விட்டு திரும்பி வந்து பார்க்கும் பொழுது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 30 லட்சம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரமூர்த்தி, இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அதனைத் தொடர்ந்து மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் கணேஷ் குமார், மரியமுத்து, வினோத் குமார், செந்தில் குமார் மற்றும் 15 ஆய்வாளர்கள் அடங்கிய 4 தனிப்படைகள் விசாரணை மேற்கொண்டன.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் உட்பட பல்வேறு தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட ராஜேஷ் குமார் (வயது 33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார். இவரிடமிருந்து ரூபாய் 24 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்ட நிலையில் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய காரும் கைப்பற்றப்பட்டது.
இச்சம்பவம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு பீளமேடு காவல் நிலையத்தில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த காவல் உதவி ஆணையர் பார்த்திபன், "ஈஸ்வரமூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 24 லட்சம் ரூபாய் மற்றும் கார் கைப்பற்றப்பட்டு உள்ளது.