கோயம்புத்தூர்:வட மாநிலங்களில் இருந்து தமிழ் நாட்டிற்கு வேலைக்காக வருவோர் எண்ணிக்கை அதிகம். இவர்கள் தொழில் ரீதியாக தமிழ் நாட்டிற்கு வந்து, இங்கேயே தங்கி வேலை செய்கின்றனர்.கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான நூற்பாலைகள் மற்றும் பவுல்ட்ரிகள் உள்ளது. இதனால், இந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
அன்னூர் அடுத்துள்ள பிள்ளைப்பம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள், நிறுவனத்தை ஒட்டியுள்ள வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி பணிக்கு சென்று வருகின்றனர். மேலும், இந்த நிறுவனத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த மாதவ் (வயது 23), தனஞ்ஜெய் (வயது 24), தரம் பீர் (வயது 35), வீரேந்தர் (வயது 36), அனுராக் (வயது 26) உள்ளிட்ட ஐந்து பேரும் ஒன்றாக அறை எடுத்து தங்கி உள்ளனர்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 11) விடுமுறை நாள் என்பதால் அறையிலேயே ஐவரும் ஒன்றாக சமைத்துள்ளனர். அப்போது, வீட்டில் இருந்த கேஸ் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த தீ விபத்தால், ஐந்து பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து அருகில் உள்ளவர்கள் அன்னூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.