தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானி கதவணை மின்நிலையத்தில் தீ விபத்து! - மின் நிலையத்தில் தீ விபத்து

கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் பவானி கதவணை மின்நிலையம் 2இல் ஏற்பட்ட தீ விபத்தை 7 மணி நேரம் போராடி தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர்.

தீ விபத்து
தீ விபத்து

By

Published : Jul 14, 2020, 11:17 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளிப்பாளையத்திற்குச் செல்லும் சாலையில் உள்ள கரட்டுமேடு பகுதியில் பவானி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு பவானி ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், பவானி கதவணை மின் நிலையம் 2 கட்டப்பட்டுள்ளது.

பவானி கதவணையில் ஆற்று நீரைத் தேக்கி மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின் நிலையத்தில் இரண்டு இயந்திரங்கள் இயக்குவது மூலம் தினசரி 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஈரோட்டில் உள்ள லோடு சென்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து பிற பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 14) காலை மின் நிலையத்தில், 7:30 மணிக்கு ஒரு எந்திரமும் 8:30 மணிக்கு ஒரு எந்திரமும் மின்சார உற்பத்திக்காக இயக்கப்பட்டது.

மின்சார உற்பத்திக்குப் பின்னர் காலை 11 மணிக்கு ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்ம் ஒன்று நிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 11:30 மணிக்கு ஜெனரேட்டர் டிரான்ஸ்போர்ட் 2 எந்திரத்தை நிறுத்தும் போது திடீரென மின் கசிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்த மின் கசிவு காரணமாக, மின்சாரம் உற்பத்தி செய்யும் பிரிவில் திடீரென எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வந்த கரும்புகையைக் கண்ட ஊழியர்கள் உடனே வெளியேறியதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

விபத்து குறித்து தகவலறிந்த கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், உதவி மாவட்ட அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் 75 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ விபத்தில் ஏற்பட்ட கரும்புகை காரணமாக, தீயணைப்புத் துறையினரால் உடனடியாக தீயை அணைக்க முடியாமல் திணறினர். சுமார் 7 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்துக்கான காரணம், ஏற்பட்ட சேதம் ஆகியவை உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு நீர்மின் உற்பத்தி வட்ட மேற்பார்வை பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், மின்வாரிய உயர் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details