கோயம்புத்தூர்: கோவையை அடுத்த ஆர்.எஸ்.புரம் ராகவன் வீதியில் தனியார் மகளிர் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு, இந்த விடுதிக்கு இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். ராமலட்சுமி (31) எனத் தன்னை அறிமுகம் செய்துகொண்ட அப்பெண், தான் மதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தான் வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறிய அப்பெண், அதற்கான ஆவணங்களையும் விடுதி நிர்வாகியிடம் சமர்ப்பித்துள்ளார். மேலும் தற்போது ஐஏஎஸ் பயிற்சி வகுப்புக்குச் சென்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே அவருக்கு விடுதியில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பெண் விடுதியில் உள்ள சில பெண்களிடம் நன்றாகப் பேசத் தொடங்கி உள்ளார். அப்போது சில பெண்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி உள்ளார். மேலும் சில பெண்களிடம் அவசர வேலைக்காக லேப்டாப் தேவைப்படுவதாகக் கூறிய அப்பெண், 2 பெண்களிடம் இருந்து 2 லேப்டாப்புகளையும் பெற்றுள்ளார்.
அது மட்டுமல்லாமல், அவசர தேவைக்காக ஒரு பெண்ணிடம் இருந்து 30,000 ரூபாய் பணமும் வாங்கி உள்ளார். தொடர்ந்து பல நாட்கள் ஆகியும், அப்பெண் விடுதிக்கு வரவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விடுதியில் தங்கி இருந்த சில பெண்கள், இதுகுறித்து விடுதி வார்டனிடம் தெரிவித்துள்ளனர்.