கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு தாலுக்கா உள்ளிட்ட பல்வேறு தாலுக்காக்கள் விவசாய நிலங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு தென்னை, தக்காளி, வாழை மற்றும் பல்வேறு வகையான காய்கறிகள், வெற்றிலை உட்பட்டவை விவசாயம் செய்யப்படுகிறது. இவை கோவை மற்றும் பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல்குவாரிகளில் குறைவாக கற்கள், உளிகள் மூலம் கற்களை வெட்டி எடுத்து சாலைகள் மற்றும் உள்ளூர் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், தற்போது பத்தாம் நம்பர், முத்தூர், சொக்கனூர், பொட்டையாண்டிபுரம், வடபுதூர், கண்ணம்மநாயக்கனூர், பெரும் பதி, காளியாபுரம், களத்தூர், நல்லையன் குட்டை என்று கிணத்துக்கடவைச் சுற்றி 200க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்படுகிறது. கல்குவாரிகளில் இயந்திரங்கள், வெடி மருந்துகள் பயன்படுத்தப்படுவதால் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மீது தூசிகள் படித்தும், அருகில் இருக்கும் வீடுகளில் விரிசல்களும் ஏற்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “கல்குவாரியில் இருந்து எடுக்கும் பாறைகள் அருகில் இருக்கும் அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் குவாரிகள் அனுமதி பெற்று கேரளாவிலுள்ள உள்ள கல்குவாரி மாஃபியாக்கள் மூலம் கற்கள் கடத்தப்படுகிறது. கிணத்துக்கடவு பகுதி பாலக்காட்டு கணவாய் ஒட்டியுள்ளதால் தென்மேற்கு பருவமழை பெய்யும் விவசாய பூமியாக திகழ்கிறது.
தொடர்ந்து கல்குவாரிகள் மூலம் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு இங்கிருக்கும் விவசாயிகள் கிணத்துக்கிடவை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முத்துமலை ஆண்டவர் கோயில் அருகே கல்குவாரி வருவதை தடுக்க சென்னை பசுமை தீர்ப்புயாத்தில் வழக்கு தொடரப்பட்டு உரிய ஆவணங்கள் மூலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இடைக்கால தடை பெறபட்டுள்ளது.