தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மனைவியே கண் கண்ட தெய்வம்" மனைவிக்கு சிலை வைத்து தினமும் பூஜை செய்யும் விவசாயி - காதல் சின்னம்

கோயம்புத்தூர் அருகே, 45 ஆண்டுகள் திருமண வாழ்வில் காதல் மழை பொழிந்த மனைவியின் நினைவாக சிலை வைத்து தினசரி பூஜை செய்து வரும் விவசாயி குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு.

farmer keeps an idol of his late wife and worships it daily
மனைவிக்கு சிலை வைத்து தினமும் பூஜை செய்யும் விவசாயி

By

Published : Feb 21, 2023, 7:35 PM IST

Updated : Feb 22, 2023, 7:26 AM IST

மனைவிக்கு சிலை வைத்து தினமும் பூஜை செய்யும் விவசாயி

கோயம்புத்தூர்:சிறுமுகை அடுத்துள்ள கணேசபுரம் கிராமத்தை சேர்ந்த 75 வது முதியவர் பழனிச்சாமி. இவரது மனைவி சரஸ்வதி 59, விவசாயியான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். திருமணத்திற்கு பின்னர் பழனிச்சாமி - சரஸ்வதி ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி வாழ்ந்து வந்தனர்.

இதன் காரணமாக கணவர் பழனிச்சாமி தனது மனைவி மீது அதிக பாசம் வைத்திருந்தார். அதனால் கணவன் மனைவி இரண்டு பேரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். 45 வருட திருமண வாழ்க்கையில் ஒரு நாள் கூட அவர்களிடையே சண்டை ஏற்பட்டது இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2019 ஆண்டு சரஸ்வதி குளியல் அறைக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இந்த அதிர்ச்சியை பழனிச்சாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சரஸ்வதியை பிரிய முடியாத அவர் தனது மனைவியின் உடலை தோட்டத்திலேயே அடக்கம் செய்தார். தொடர்ந்து தனது மனைவி சரஸ்வதிக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் பழனிசாமி மனதில் தோன்றியது. இதனைத் தொடர்ந்து பழனிச்சாமி தனது மனைவியை அடக்கம் செய்த இடத்தில் நினைவு மண்டபம் அமைத்து, மனைவி சரஸ்வதியின் திருவுருவச் சிலையை முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் நிறுவினார்.

அன்று முதல் 3 வருடங்களாக பழனிச்சாமி தனது மனைவியின் திருவுருவச்சிலைக்கு தினசரி இரண்டு வேளையும் தீபம் ஏற்றி பூஜை செய்து வழிபட்டு வருகிறார். வெளியூர் சென்றால் பூஜை செய்வது தவறிவிடும் என்ற எண்ணத்தில் வெளியே எங்கும் செல்லாமல் தனது தோட்டத்திலேயே தங்கி உள்ளதாக கூறுகிறார் அவர். சரஸ்வதி உயிருடன் இருக்கும் போதே புதிய வீட்டை கட்டி அதற்கு பழனிச்சாமி - சரஸ்வதி இல்லம் என பெயர் சூட்டியுள்ளார்.

இது குறித்து விவசாயி பழனிச்சாமி கூறுகையில், ”திருமணமான நாள் முதல் இரண்டு பேரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். 45 வருடத்தில் ஒரு நாள் கூட எங்களுக்குள் சண்டை வந்ததில்லை. இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்தது எனக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் என்னுடனே இருக்க வேண்டும் என்பதால் அவருக்கு நினைவு மண்டபம் அமைத்து அதில் அவரது உருவச் சிலையை வைத்து வழிபட்டு வருகிறேன்.

இதற்காக திருப்பூர் அருகே உள்ள திருமுருகன் பூண்டியில் உள்ள ஒரு சிற்ப கலைக்கூடத்தில் அவரது போட்டோவை கொடுத்து சரஸ்வதியின் உருவச் சிலையை சிற்பமாக வடிவமைத்து உள்ளேன். அவருடன் வாழ்ந்த காலங்கள் என்றும் என் நினைவில் இருக்கும். எந்த ஒரு சூழலிலும் என்னை விட்டுக் கொடுக்காத அவர் என்னை விட்டு நீங்கியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொருநாளும் அவரின் நினைவாகவே வாழ்ந்து வருகிறேன்.

இன்றைய கால கட்டத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளுக்கு எல்லாம் சண்டை அதிகரித்து விவாகரத்து பெற நீதிமன்றம் செல்கின்றனர். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். மனைவி சொல்லை கணவன் தட்டாமல் செய்ய வேண்டும், அதேபோல் கணவனின் சொல்லையும் மனைவி கேட்டு நடந்தால் எந்த ஒரு சூழலிலும் இருவருக்கும் சண்டைகள் வராது, அன்பு மேலோங்கும்”என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரூ.2,000 தான் மொத்த செலவு.. யூடியூப் மூலம் மட்டுமே பிரச்சாரம்.. ஈரோடு கிழக்கில் இப்படி ஒரு வேட்பாளரா?

Last Updated : Feb 22, 2023, 7:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details