கோவை :உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் பிப்ரவரி 24ஆம் தேதி போரைத் தொடங்கியது. தற்போது வரை அங்கு தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ்வில் மார்ச் 1ஆம் தேதி நடத்தப்பட்டத் தாக்குதல் சம்பவத்தின்போது, கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா (22) உயிரிழந்தார். இது இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் நாள்தோறும் தனி விமானம் மூலம் தாயகம் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் உக்ரேனில் இருந்து கோவை திரும்பிய மருத்துவ மாணவி நந்திதா கனகராஜ் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.
'உணவுப் பற்றாக்குறையால் தவித்தோம்'
அவர் கூறுகையில், 'கார்கீவ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். போர் தொடங்கிய நாள் முதல் நாங்கள் தங்கியிருந்த இடத்தில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. உணவு, தண்ணீருக்குத் தட்டுப்பாடு இருந்தது. அரசு தங்களை மீட்கும் என நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அது நடக்காததால் நாங்களே வெளி வந்தோம்.
அங்கிருந்து ராக்கிவ் பகுதிக்கு ரயில் மூலம் வந்து, அங்கிருந்து ரோமானிய எல்லைக்கு வந்து சேர்ந்தோம். விடுதியிலிருந்து வெளியே வந்தால் எது நடந்தாலும் நாங்களே பொறுப்பு எனக்கூறி விட்டுத்தான் வந்தோம். இன்னும் நிறைய மாணவர்கள் அங்கு உள்ளனர். அவர்களை விரைவாக இந்தியா அழைத்து வர வேண்டும். பதுங்கு அறையில் ஒருவாரம் உணவுப் பற்றாக்குறையால் நாங்கள் தவித்தோம்.