கோயம்புத்தூர்:கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. அண்மையில் இந்த வழக்கு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மின்னணு சாதனங்களில் நடைபெற்ற தகவல் பரிமாற்ற விவரங்களை, கோவையில் உள்ள ஆய்வகத்தில் இருந்து விரைந்து பெற்றுத் தர வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கோரிக்கை விடுத்தாா்.
அதன் அடிப்படையில், நீதிமன்றம் சாா்பில் கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் விபத்து குறித்து ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவித்த சிவகுமார் என்பவரிடம், சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள சம்மன் அனுப்பி இருந்தனர்.