கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் மாவட்டம் தடாகம் அடுத்த பன்னிமடை தாளியூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ், அப்பகுதியில் சைக்கிள் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நாகராஜ் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை யாரோ கதவை தட்டுவது போல் சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் வெளியே வர முயன்ற போது, அருகில் உள்ளவர்கள், வீட்டின் முன்பு யானைகள் நிற்பதாகவும், வெளியே வர வேண்டாம் என சத்தம் எழுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆகையால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பின்னர், யானை வீட்டின் கதவை உடைத்து உள்ளே புக முயன்றபோது, அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு யானைகளை விரட்டி உள்ளனர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “வனப்பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான யானைகள் ஊருக்குள் புகுந்து வருகிறது. தற்போது தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் 50க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளதால், அவை ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து, உணவு மற்றும் தண்ணீருக்காக அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து வருகிறது.