கோயம்புத்தூர் மாவட்டம் பேரூரை அடுத்த சென்னனூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு நேற்று (ஜூன் 4) அதிகாலை ஐந்து யானைகள் கொண்ட கூட்டம் வந்துள்ளது. அப்போது, அந்த தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளை யானைகள் சாப்பிட்டன. பின்னர், விடிந்த பிறகும் வனப்பகுதிக்குள் செல்லாமல், அதே தோட்டத்தில் யானைகள் முகாமிட்டுள்ளது.
இது குறித்து போலுவாம்பட்டி வனத்துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள் தகவல் அளித்துள்ளனர். இவ்வாறு கிடைத்த தகவலின் அடிப்படையில், யானைகளை விரட்ட 21 பேர் கொண்ட வனத்துறையினர் மூன்று குழுக்களாகப் பிரிந்து யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகள் - வனத்துறையின் சிறப்பு திட்டம்! இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “நேற்று முன்தினம் (ஜூன் 3) இரவு வனப்பகுதியில் இருந்து உணவு தேடி 7 யானைகள் கொண்ட கூட்டம் மாதம்பட்டி பகுதிக்கு வந்துள்ளது. இதில் இரண்டு யானைகள் வனப் பகுதிக்குள் திரும்பிய நிலையில், மீதமுள்ள ஐந்து யானைகள் தோட்டத்திலேயே முகாமிட்டுள்ளன. இந்தப் பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் நிறைவாக உள்ளதால் யானைகள் வேறு எங்கும் செல்லாமல் உள்ளது.
பகல் நேரத்தில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவது என்பது சவாலாக இருக்கும் என்பதால், மாலை நேரத்தில் முகாமிட்டுள்ள இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனப்பணியாளர்கள் தொடர்ந்து யானைகளை கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் யானை... மலை ரயில் பயணிகள் உற்சாகம்...