கோயம்புத்தூர்:ஆனைமலை அருகே உள்ள டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பல வளர்ப்பு யானைகளும் பங்கேற்றன.
பொதுவாகத் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது உழவு செய்ய உதவும் சூரியனுக்கு தாங்கள் விளைவித்த உணவுகளை விவசாயிகள் படையலிட்டு வழிபடுவர். அதைத் தொடர்ந்து விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதன் விதமாக மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அது போலவே, காடுகளைச் சார்ந்து வாழும் மலைவாழ் மக்கள் வனத்தையும், இயற்கையையும் பாதுகாக்கும் யானைகளுக்கும் நன்றி செலுத்துவதன் விதமாக யானை பொங்கல் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் ஆண்டுதோறும் யானை பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த முகாமில், வனத்துறையினரால் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கும் யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக வனத்துறையினரும் இந்த விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு கோழிகமுத்தி யானைகள் முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யானைப் பொங்கல் விழாவில் யானைகளைக் குளிப்பாட்டி, பொட்டு வைத்து, மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: பாலமேடு ஜல்லிக்கட்டு; விறுவிறுப்படைந்த 6வது சுற்றின் நிலவரம்!
தொடர்ந்து, மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப்படி மண் பானைகளில் பொங்கல் வைத்து சூரியனுக்குப் படைத்தனர். பின்னர், யானைகளுக்குப் பிடித்த உணவான கரும்பு, வாழை, கொள்ளு, ராகி, அரிசி சாதம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஒவ்வொரு யானைக்கும் வழங்கினர். இந்த யானைப் பொங்கல் விழாவிற்காகக் கும்கி கலீம், சின்னதம்பி, அரிசி ராஜா, முத்து உள்ளிட்ட 26க்கும் மேற்பட்ட யானைகள் ஒரே இடத்திற்குக் கொண்டு வரப்பட்டன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த யானை பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். வழக்கமாக வீட்டுப் பொங்கல், மாட்டுப் பொங்கல், பூப்பொங்கல் ஆகியவற்றை மட்டுமே கொண்டியுள்ளதாகக் கூறும் சுற்றுலாப் பயணிகள், யானைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகக் கொண்டாடப்பட்ட யானை பொங்கல் விழாவில் கலந்து கொள்வது புது அனுபவமாக இருந்ததாகக் கூறியுள்ளனர்.
மேலும், குடும்பத்துடன் இந்த விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளதாகக் கூறிய சுற்றுலாப் பயணிகள் விழாவை ஏற்பாடு செய்துள்ள வனத்துறைக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் பார்கவ தேஜா, வனச்சரகர்கள் மணிகண்டன், சுந்தரவேல் மற்றும் வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தென்காசியில் மஞ்சுவிரட்டைப் போன்ற வித்தியாசமான விளையாட்டு.. பொதுமக்கள் உற்சாகம்!