பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆழியார் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தண்ணீரைத் தேடி காட்டு யானைக் கூட்டம் அணைப் பகுதியில் முகாமிட்டுள்ளது. இதில் ஒற்றை யானை ஒன்று நவமலைப் பகுதியில் அட்டகாசம் செய்துவருகிறது.
இந்நிலையில் வனத்துறையினர் ஆழியார் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், இதனால் வனத்துறையை சேர்ந்த ஊழியர்கள் பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது.
வனத்துறையினரை துரத்தும் யானை இதனிடையே நேற்று காலை பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட நவமலை சாலையில் வன ஊழியர்கள் ஜீப் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர், அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒற்றை பெண் யானை வனத்துறையினர் வந்த வானத்தை நோக்கி ஆக்ரோஷமாக துரத்தி வந்தது.
இதைக் கண்ட வனத்துறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் எழுப்பி யானையை காட்டுக்குள் திருப்பி அனுப்பினர், தண்ணீரை தேடி வனப்பகுதிக்குள் உள்ள காட்டு யானைகள் வெளியேறுவது வனத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரோந்து செல்லும் வனத்துறையினருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக வனத்துறை வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.