கோவை:கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள சிறுமுகை வனச்சரகத்தில் பெண் யானை ஒன்று சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டு மாடு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
மேலும் யானைகளின் வலசை பாதையில் சிறுமுகை வனச்சரகம் முக்கிய வழித்தடமாக உள்ளதால் யானைகளின் நடமாட்டம் எப்போதும் காணப்படும். இதனிடையே, தற்போது யானைகளின் இடப்பெயர்ச்சி காலம் என்பதால் அருகில் உள்ள கேரளா வனப்பகுதியில் இருந்தும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்தும் வந்துள்ள ஏராளமான யானைகள் சிறுமுகை வனச்சரகம், பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள் சிறுமுகை கூத்தாமண்டி அடுத்த மூலையூர் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறி அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மூலையூர் கிராமத்தில் விவசாய நிலத்தை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில், இருப்பதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள், இது குறித்து சிறுமுகை வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.