கோயம்புத்தூர்:பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்சிலிப் வனச்சரகம் கோழிக்கமுத்தியில் யானைகள் முகாம் உள்ளது. இங்கு 27 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு அசோக் என்கிற ஆண் யானை மிதித்ததில் அதைப் பராமரித்து வந்த பாகன் ஆறுமுகம் உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
யானை அசோக்கிற்கு லேசாக மதம் பிடித்தற்கான அறிகுறிகள் தென்பட்டன. இதனை பாகன் ஆறுமுகம் அதிகாரிகளிடம் தெரிவித்து, அசோக் யானையை கரோல் எனப்படும் மரக்கூண்டில் அடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதிகாரிகளோ, இரண்டொரு நாள் கழித்து பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக கூறியதாக தெரிகிறது. அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால் அடுத்த நாளே இந்த துயர சம்பவம் நடந்தது.
இந்நிலையில் யானைகள் முகாம் அருகே காட்டு யானை ஒன்று காயத்துடன் அவதிப்பட்டு வந்தது. அதற்கு சிகிச்சையளிக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரத்திலும் வனத்துறை அதிகாரிகள் அலட்சியமாகவே இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. . இதுதொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனைத்தொடரந்து அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.