EVM மற்றும் VVPAT தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து கோவை மாவட்டத்தில் விழிப்புணர்வு மையங்கள் அமைப்பு கோயம்புத்தூர்: 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நடைபெறவிருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது EVM (Electronic Voting Machine) VVPAT இயந்திரத்தில் வாக்குகள் பதிவு செய்வது தொடர்பான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவு சார்பில் EVM மற்றும் VVPAT இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது, அந்த இயந்திரங்களின் செயல்பாடு போன்ற பொதுமக்களின் அனைத்து குழப்பங்களுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் விழிப்புணர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் EVM VVPAT மாதிரி இயந்திரங்கள் வைக்கப்பட்டு, அதற்கென ஒரு தனி அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பொதுமக்களுக்கு இந்த இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது, வாக்களித்ததை எவ்வாறு சரி பார்ப்பது என்பது குறித்து முழுமையாக எடுத்துரைக்கின்றனர்.
மேலும் பொதுமக்களின் சந்தேகங்களுக்கும் உரிய விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும், பொதுமக்களும் அவர்களது மாதிரி வாக்குகளைச் செலுத்தி, அது குறித்து தெரிந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வின்போது, சிறப்பு கையேடுகள் அமைக்கப்பட்டு, அதில் பொதுமக்களின் வருகையை உறுதிபடுத்தும் வகையில், அவர்களிடம் கையொப்பங்களும் பெறப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “கோவை மாவட்டத்தில் இந்த விழிப்புணர்வு மையங்களை நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கும் நாள் வரை செயல்படுத்த உள்ளது. இனிவரும் நாட்களில் கல்லூரிகளிலும், வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களிலும் வாக்குப்பதிவு குறித்த சந்தேகங்களைத் தீர்க்க மையங்கள் அமைத்து, புதிய வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து, பொதுமக்கள் சார்பில் செல்வா என்பவர் கூறுகையில், “இந்த மையம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எவ்வாறு வாக்களிப்பது, நமது வாக்கு சரியாக பதிவாகியுள்ளதா என்பது குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அனைத்தும் எடுத்துரைக்கப்படுகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் எவ்வளவு விழிப்புணர்வு கொடுத்தாலும், வாக்களிக்கும் சதவிகிதம் குறைவாகவே இருக்கிறது. எனவே வாக்களிப்பதில் நிறைந்த சந்தேகங்களை களைந்து, நூறு சதவிகிதம் வாக்குகள் பதிவாக இந்த மையம் பெரிதும் உதவும்" என்றார்.
இதையும் படிங்க:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - பொன்முடி சந்திப்பு! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?