கோயம்புத்தூர் மாவட்டம் ஆலாந்துறை அடுத்த சாடிவயல் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவுக்காக அருகிலுள்ள கிராமங்களுக்கு நாள்தோறும் வருவது வழக்கம். அருகிலேயே நொய்யல் ஆறு இருப்பதால், குடிநீரை தேடி வரும் யானைகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும். இந்நிலையில், காருண்யா அருகேயுள்ள சப்பணிமடை பகுதியில் நொய்யல் ஆறு பகுதியைச் சேர்ந்த சிலர் காட்டு யானைகள் வருவதைத் தடுக்க மின்வேலி அமைத்துள்ளனர்.
ஆற்றின் குறுக்கே கம்பிகளை கொண்டு மின்வேலி அமைத்துள்ளதால் யானை மட்டுமல்லாமல் மற்ற வன விலங்குகள் பாதிப்பதோடு அவ்வழியாக செல்லக்கூடிய பழங்குடியின மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, உடனடியாக வனத்துறையினர் தலையிட்டு இந்த மின் வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.