மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தற்போது சோளப்பயிர் அதிகமாகப் பயிரிடப்பட்டுள்ளது. அதன் வாசனை காரணமாக வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்க வனத் துறையினர் ஆல்பா, பீட்டா, காமா என மூன்று சிறப்புப் படைகள் அமைத்து யானைகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். எனினும் உணவிற்காக யானைகள் ஊருக்குள் புகுவது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
யானைகள் முதியவர் மீது தாக்குதல்
இந்நிலையில், நேற்று இரவு (டிச. 16) 9 மணி அளவில் கோவை பன்னிமடை அடுத்த ஸ்ரீ நகர் பகுதியில் மூன்று காட்டு யானைகள் கொண்ட கூட்டம் புகுந்துள்ளது. சோளப்பயிர், வாழை அதிகமாகப் பயிரிடப்பட்டுள்ளதால் மேய்ச்சலுக்கு வந்த யானைகள் சாலையில் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த முதியவரை துரத்தி தாக்கியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.